செப்பாங், ஜூலை 9-

சிலாங்கூர், செப்பாங்கில் உள்ள பண்டார் பாரு சாலாக் திங்கியில் அமைந்துள்ள ஒரு கோயிலில், 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு வழங்கியதாகக் கூறப்படும் இந்தியாவைச் சேர்ந்த சந்தேகப்பேர்வழிக்கு போலீஸ் வலைவீசியுள்ளது.

அச்சம்பவம் தொடர்பில், பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து கடந்த ஜூலை 4 ஆம் தேதி இரவு 8.15 மணியளவில் புகார் பெறப்பட்டதாக, செப்பாங் மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டெண்ட் கமிஷனர் நோர்ஹிசாம் பஹாமன் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட கோயிலில் தற்காலிக பூசாரியாக பணிபுரிந்த சந்தேக நபர் தமக்கு பாலிதல் தொந்தரவு கொடுத்ததாக, அப்பெண் அவரது புகாரில் கூறியுள்ளார்.

“அக்கோயிலின் நிரந்தர பூசாரி தற்போது வெளிநாட்டில் உள்ளார். அவருக்கு பதிலாக, சந்தேகப்பேர்வழியான அவ்வாடவர், தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளது, தொடக்கக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் முகத்திலும் உடலிலும் தீர்த்தத்தைத் தெளித்தப்பின்பு, அவ்வாடவர் அந்த இழிச்செயலைப் புரிந்துள்ளார்.

பெண் ஒருவரின் கண்ணியத்தை களங்கப்படுத்தியதற்காக, குற்றவியல் சட்டப் பிரிவு 354-ன் கீழ், விசாரிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவ்வாடவர் குறித்து தகவலறிந்தவர்கள் போலீஸை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று நோர்ஹிசாம் கூறினார்.

தகவல் தெரிந்தவர்கள், விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் B. சத்தியன் (013-2060771) அல்லது செப்பாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை (03-8777 4222) தொடர்பு கொள்ளலாம்.