கோலாலம்பூர், அக். 9-
இவ்வாண்டு கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பெருநாளுக்கு இந்திய சமுதாயத்திற்கு தீபாவளி பரிசாக அரசாங்க உயர்கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களுக்கு கூடுதலாக 700 இடங்களை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் அதிகரித்துள்ளார். இது குறித்து பிரதமர்துறையின் கீழ் செயல்படும் இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவின் (செடிக்) தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் கூறுகையில், அண்மையில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் வெளியிட்ட இந்திய சமுதாய மேம்பாட்டிற்கான வியூக பெருந்திட்டத்தில் (எம்.ஐ.பி) குறிப்பிட்டுள்ளதற்கு ஏற்ப இந்த கூடுதல் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன் வாயிலாக உயர்கல்வி கூடங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 7 விழுக்காடாக உயர்வடையும் என அவர் கூறினார். இந்நாட்டிலுள்ள இந்தியர்களுக்கு எம்.ஐ.பி. வியூக பெருந்திட்டம் ஒரு பரிசாகும். செடிக் பிரிவும் இந்திய சமுதாய விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவை குழுவின் நிர்வாக செயற்குழு தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியமும் உயர்கல்வி கூடங்களில் தகுதி வாய்ந்த 745 இந்திய மாணவர்களுக்கு இடம் கிடைக்காத விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

பிரதமர் நஜீப் உடனே உயர்கல்வி அமைச்சிடம் சம்பந்தப்பட்ட இந்திய மாணவர்களுக்கு இடமளிக்கும்படி உத்தரவிட்டார். பெரும்பாலான மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்வி கூடங்களில் இடமளிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள மாணவர்களுக்கு கட்டம் கட்டமாக இடமளிக்கப்படும் என பெர்னாமா செய்தி பிரிவிடம் பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ்.ராஜேந்திரன் கூறினார்.

நேற்று ஐ.பி.எப். கட்சியின் 25ஆம் ஆண்டு தேசிய பொது பேரவையில் கலந்துக்கொண்ட பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இந்திய மாணவர்களுக்கு அரசாங்க உயர்கல்வி கூடங்களில் கூடுதலாக 700 இடங்கள் வழங்குவதற்கு தாம் உத்தரவிட்டிருப்பதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.