கோலாலம்பூர், அக்.9-

14ஆவது பொதுத்தேர்தல் எப்போது நடைபெறும் என்ற கேள்வி பல மாதங்களாக மலேசியர்களிடையே எழுந்து வருகின்றது.

இந்நிலையில் இந்த பொதுத்தேர்தல் அடுத்தாண்டு மார்ச் மாதம் நடைபெறவிருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு நெருக்கமான வட்டாரம் ஒன்று தெரிவித்தது.

14ஆவது பொதுத்தேர்தல் அடுத்தாண்டு மே மாதம் நடைபெற வாய்ப்பில்லை. அதற்கு முன்பதாக அதாவது மார்ச்சில் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது. இதனால், பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் பொதுத்தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக பிப்ரவரி மாதத்தில் நாடாளுமன்றத்தை கலைக்கக்கூடும் என எதிர்பார்க்கிறது.

அம்னோ, ம.இ.கா. உள்பட தேசிய முன்னணியில் உள்ள அனைத்து உறுப்பு கட்சிகளும் தங்கள் கட்சிகளின் வேட்பாளர்களின் பட்டியலை பிரதமரிடம் தாக்கல் செய்துள்ளன. பிரதமரும் எந்த வேட்பாளர் எங்கு போடியிடுவார் என்பது தீர்மானித்துவிட்டதாக தெரிகிறது.

பல தொகுதிகளில் வேட்பாளர்கள் என கைக்காட்டப்பட்டவர்கள் தங்கள் கட்சி, கூட்டணி சார்பில் மக்களை கவரும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் மார்ச்சில்தான் பொதுத்தேர்தல் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக கூறாவிட்டாலும் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராக இருக்கும்படி கூறி வருகிறார். நேற்று நடைபெற்ற ஐ.பி.எப். கட்சியின் 25ஆம் ஆண்டு பொதுப்பேரவையிலும் அவர் இதனை கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.