ஹைதராபாத், ஜூலை 13-
தமிழ் திரையுலகில் ‘சாமி’ படத்தில் வில்லனாக அறிமுகமாகி புகழ் பெற்ற நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல்நலக் குறைவால் இன்று உயிரிழந்தார்.
ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், தெலுங்கு சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தவர். 1942 ஆம் ஆண்டு ஜூலை 10 அன்று விஜயவாடாவில் பிறந்தார். இவருக்கு வயது 83.
குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 2003 இல் வெளியான ‘சாமி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார். 1999 முதல் 2004 வரை விஜயவாடா கிழக்கு தொகுதியில் ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
‘திருப்பாச்சி’, ‘குத்து’, ‘ஏய்’, ‘கோ’, ‘சகுனி’ உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். நடிப்பு, பாடல், டப்பிங் என பல திறன்களைக் கொண்ட இவர், 750-க்கும் மேற்பட்ட படங்களில் பங்காற்றியுள்ளார். 2023 இல் வெளியான ‘சுவர்ண சுந்தரி’ அவரது கடைசி படமாகும்.
கடந்த சில நாட்களாக உடல்நலப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்த கோட்டா சீனிவாச ராவ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று (ஜூலை 13) சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

