ஜொகூர் பாரு, ஜூலை 13-
ஜோகூர் டாருல் தாசிம் – JDT அணி, 2025 மலேசிய பிரீமியர் ஃபுட்சால் லீக் (MPFL) டிவிஷன் 1-இல் கிண்ணத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை, ஜோகூர் பாசிர் கூடாங் நகர அரங்கில் நடந்த இறுதி லீக் ஆட்டத்தில், நெருங்கிய போட்டியாளரான சிலாங்கூர் FC அணியிடம் 5-8 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த போதிலும், JDT சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
கடந்த வாரம் கோத்தா கினபாலுவில் சபாவை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், ஜுவான் மிகுவல் அன்டோனியோ கார்சியா பயிற்சியாளராக உள்ள JDT அணி, ஏற்கனவே கிண்ணத்தை வெல்வதை உறுதி செய்திருந்தது.
இரண்டு சுற்று வடிவிலான லீக் போட்டியில், 8 அணிகள் பங்கேற்ற நிலையில், JDT 14 போட்டிகளில் 13 வெற்றிகளுடன் 39 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்தது. சிலாங்கூர் FC, 36 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

