நியூஜெர்சி, ஜூலை 14-

பலம் பொருந்திய கிளப்பாக பார்க்கப்படும் பிரான்ஸின் பி.எஸ்.ஜி அணியை சுழியத்திற்கு மூன்று என்ற அபாரக் கோல்களில் வீழ்த்தி, கிளப் உலகக் கிண்ணத்தை இரண்டாம் முறையாக வென்று செல்சி சாதனை படைத்தது.

இன்றைய இறுதியாட்டத்தில், இளம் நட்சத்திர வீரர் கோல் பால்மர், இரண்டு கோல்களைப் புகுத்தியும் ஒரு கோலை புகுத்த துணைப் புரிந்தும், செல்சியின் வெற்றியில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

போட்டியின் தொடக்கத்தில், பிரபல பாடகர் ராபி வில்லியம்ஸ் ஃபிஃபாவின் முதல் ‘அதிகாரப்பூர்வ கீதத்தை’ பாடி, நியூஜெர்சி அரங்கில் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், களத்தில் பால்மரின் மின்னல் ஆட்டமே அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

2013-14க்குப் பிறகு, ஒரு முதன்மைப் போட்டியின் இறுதியாட்டத்தில், மூன்று கோல் பங்களிப்புகளை வழங்கிய இரண்டாவது செல்சி வீரர் என்ற பெருமையை பால்மர் பெற்றார். இதற்கு முன், 2019ஆம் ஆண்டு ஐரோப்பிய லீக் இறுதியாட்டத்தில், ஆர்செனலுக்கு எதிராக ஈடன் ஹசார்ட் இந்தச் சாதனையைப் புரிந்திருந்தார்.

மேலும், பி.எஸ்.ஜி-க்கு எதிராக ஒரு இறுதியாட்டத்தில் பல கோல்கள் அடித்த மூன்றாவது வீரராகவும் பால்மர் விளங்குகிறார். இதற்கு முன், மைக்கேல் பிளாட்டினி (1982 கூப் டி பிரான்ஸ்) மற்றும் அலெஸாண்ட்ரோ டெல் பியரோ (1997 யுஇஎஃப்ஏ சூப்பர் கிண்ணம்) இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருந்தனர்.

போட்டியின் இறுதி நிமிடங்களில் சில பரபரப்பான தருணங்கள் ஏற்பட்டாலும், செல்சிவின் ஒட்டுமொத்த ஆட்டமே ரசிகர்களை கவர்ந்தது.

வெற்றிப்பெற்ற செல்சிக்கு, கிளப் உலகக் கிண்ணத்தை, அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் எடுத்து வழங்கினார்.