பத்துமலை, ஜூலை 18 –

டாக்டர் பண்பரசி கனிமொழி சங்கீத கலாலய இசைக் கல்லூரி ஏற்பாட்டில் பத்துமலையில் “பாடி பாடி உந்தன் பாதம் பணிந்தோம் முருகா” எனும் தலைப்பில் திருப்புகழ் பாராயணம் நடைபெறவிருக்கிறது.

நாளை ஜூலை 19ஆம் தேதி அதிகாலை மணி 4.30 அளவில் தொடங்கும் இந்த நிகழ்வில் தங்கள் குழுவினர் பத்துமலையின் ஒவ்வொரு படியிலும் ஒரு திருப்புகழ் என 272 திருப்புகழ் பாடி பக்தர்களை பக்தி மழையில் நனையச் செய்வர் என்று இந்த சங்கீத கலாலய இசைக் கல்லூரி ஒருங்கிணைப்பாளரான டாக்டர் பண்பரசி கோவிந்தசாமி தெரிவித்தார்.

மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் தொடக்கி வைக்கும் இந்நிகழ்ச்சிக்கு மஹிமா தலைவர் டத்தோ என். சிவக்குமார் ஆகியோர் சிறப்பு வருகை புரிவார்.

“என்னோடு சகோதரி கனிமொழி மற்றும் 22 பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் திருப்புகழை இடைவிடாது பாடி வருவோம்”.

இந்த ஆன்மிக முயற்சியை மலேசிய சாதனை புத்தகத்திலும், ஆசியான் உலக சாதனை புத்தகத்திலும் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே எங்களின் தலையாய நோக்கம் என்றார் பண்பரசி.

காலை 11.30 மணியளவில் நிகழ்ச்சி நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையொட்டி இன்று மாலை மணி 6.30 அளவில் பத்துமலை, விநாயகர் ஆலயத்தில் டத்தோ சிவகுமார் தலைமையில் தொடக்க விழா நடைபெறும்.

இதில் திருப்புகழ் பாராயணம், நூல் வெளியீடு, வயலின் இசைக் கலைஞர் லோகேஸ்வரன் களியபெருமாள், பிரதாப் ஷர்மா உள்ளிட்ட தங்கள் குழுவினரின் சிறப்பு கச்சேரி போன்றவையும் இடம் பெறும்.

இந்த ஆன்மிக பயணத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்க இவ்விரு நிகழ்ச்சிகளிலும் திரளாகக் கலந்து கொள்ளும்படி சுற்று வட்டார பக்தர்களுக்கு டாக்டர் பண்பரசி அழைப்பு விடுத்துள்ளார்.