சென்னை,ஜூலை 20-
பன்னாட்டுத் தமிழ்க்கல்வி ஆராய்ச்சி நிறுவனம் மலேசியா, பேரா மாநில அமைச்சராக பதவி வகித்து வரும் அ. சிவநேசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி சிறப்பித்தது.
தமிழ்மொழி வளர்ச்சியை உலகளவில் தொடர்ந்து முன்னெடுக்கும் நிறுவனமாக இது திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பேராசிரியர் முனைவர் சங்கர் கலியன் நிறுவனர் மற்றும் தலைவராகவும் பேராசிரியர் முனைவர் பா.ஜான்சிராணியைச் செயலாளராகவும் கொண்டு சிறப்பாக இயங்கி வருகிறது இந்நிறுவனம்.
இந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் இன்று 20.07.2025 ஞாயிற்றுக்கிழமை தொல்லியல் நோக்கில் சோழர்கள் அன்றும்-இன்றும் எனும் பொருண்மையில் பன்னாட்டு தொல்லியல் மாநாடு ஆய்வு நூல் வெளியீடு, விருது வழங்குதல் நிகழ்வு வடபழனி சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இம்மாநாட்டில் பேராக் மாநில சுகாதாரம், மனித வளம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் விவகாரம் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார்.
அரசியல் களத்தில் மக்களுக்காக சிவநேசன் ஆற்றி வரும் சீரிய பணிகள், தமிழ்மொழி மற்றும் சமய தொண்டு ஆகியவற்றிக்காக இவர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் பேராக் மாநில மக்கள் ஓசை தலைமை நிருபர் எஸ்.லிங்கேஸ்வரன் எழுத்து துறைக்காகவும் சுங்கை சிப்புட் கி.மணிமாறன் சமூக சேவைக்காகவும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இந்தியாவின் முன்னாள் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் துறையின் மத்திய அமைச்சரும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா தலைமையில் இம்மாநாடு நடைபெற்றது.
இம்மாநாட்டில் சி.ஏ.மல்லை சத்தியா, துணைப் பொதுச்செயலாளர், ம.தி.மு.க., முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், செய்தித் தொடர்புத் தலைவர், தி.மு.க., ரஷ்சியா தமிழ்சங்கத்தின் தலைவர் முனைவர் சேகர் சாமியப்பன், ஈப்போ முத்தமிழ்ப்பாவலர் மன்றத்தின் தலைவர் கவிஞர் அருள் ஆறுமுகம் கண்ணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனத்தின் சார்பாக அமெரிக்காவிலிருந்து வருகைந்த பாலா கண்ணன் முன்னிலை வகித்தார்.
இலங்கை, மொரீசியஸ், அமெரிக்கா, ரஷ்யா, லண்டன், சிங்கப்பூர், கம்போடியா, கனடா, சுவிட்சர்லாந்து, பிரான்சு, எத்தோப்பியா போன்ற நாடுகளிலிருந்து வந்த தமிழறிஞர் பெருமக்களும் தமிழ்த் தொண்டிற்காக விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
இம்மாநாட்டில் புலம்பெயர் தமிழர் ஆய்வு நிறுவனம், அமெரிக்கா, ரஷ்யா தமிழ்ச் சங்கம், ரஷ்யா, ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றம், மலேசியா போன்ற பன்னாட்டு தமிழ்மொழிக்கான அமைப்புகள் இணைந்து பணியாற்றின.

