கோலாலம்பூர், ஜூலை 26-

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பதவி விலகக்கோரி, இன்று நடத்தப்பட்ட பேரணியில் சுமார் 18 ஆயிரம் பேர் பங்கேற்றதாக, தேசிய போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

ஆயினும், அப்பேரணியில் எந்தவொரு நபரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

போலீஸின் கண்காணிப்பு நடவடிக்கைகள் மிகவும் தொழில்முறையாகவும், நெறிமுறைகளுக்கு உட்பட்டும் மேற்கொள்ளப்பட்டது. இது அரச மலேசிய போலீஸ் படையின் அமைதியான அணுகுமுறையையும், பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பையும் பிரதிபலித்ததாக டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் குறிப்பிட்டார்.

“தேசிய பள்ளிவாசல், சோகோ வணிக வளாகம், மஸ்ஜிட் ஜாமேக், பசார் செனி மற்றும் மெர்டேகா சதுக்கம் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் நடைபெற்ற இந்த பேரணியை கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் போலீஸ் தொழில்முறையாக செயல்பட்டது,” என்று அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

காலை 10.30 மணி முதல் பங்கேற்பாளர்கள் படிப்படியாக ஒன்று கூடத் தொடங்கியதாகவும், மதியம் 2 மணியளவில் பேரணி மெர்டேகா சதுக்கத்தை நோக்கி நகர்ந்தது. பல அரசியல் தலைவர்களும், அமைப்புகளின் பிரதிநிதிகளும் பேரணியில் உரையாற்றியதாக அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் மற்றும் புக்கிட் அமான் தலைமையகங்களைச் சேர்ந்த 3,000 போலீஸ் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் பேரணியின் பாதுகாப்பு மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பணியமர்த்தப்பட்டனர்.

மொத்தத்தில், இந்த பேரணி அமைதியாகவும், கட்டுப்பாட்டுடனும், பொது ஒழுங்கை பாதிக்கும் எந்தவொரு சம்பவமும் இன்றி நடைபெற்றதாக டத்தோ ஸ்ரீ முகமட் காலிட் கூறினார்.