இஸ்கண்டார் புத்ரி, ஜூலை 29-

கடந்த வாரம் உணவு வாங்குவதற்காக காரில் தனியாக விடப்பட்டு மாயமானதாக புகாரளிக்கப்பட்ட ஆறு வயது சிறுவன் டிஷாஃத்தின் உடல், நெகிரி செம்பிலானின் ஜெம்போல், ரொம்பின் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

அதற்கடுத்து, கைது செய்யப்பட்ட அச்சிறுவனின் 36 வயது தந்தை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர், அசிஸ்டெண்ட் கமிஷனர் எம். குமரேசன், செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை அதிகாலை 2.15 மணியளவில் உள்நாட்டு ஆடவர் ஒருவர் தனது ஆறு வயது மகன் மாயமானதாக புகார் அளித்ததாக தெரிவித்தார்.

புகாரின்படி, கடந்த புதன்கிழமை மாலை 6 மணியளவில் புக்கிட் இண்டா பகுதியில் உணவு வாங்குவதற்காக காரில் தனியாக விடப்பட்டிருந்தபோது சிறுவன் மாயமானதாக தந்தை கூறியுள்ளார்.

“புகாரளித்தவர், காரை புக்கிட் இண்டா பகுதியில் நிறுத்திவிட்டு உணவு வாங்கச் சென்றபோது, சிறுவன் காரில் தனியாக இருந்ததாகவும், பின்னர் மாயமானதாகவும் கூறினார்,” என்று குமரேசன் விளக்கினார்.

விசாரணையின் முதல் கட்டமாக, சிறுவனின் தந்தை வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, குற்றவியல் சட்டத்தின் பிரிவு 117 இன் கீழ் ஜூலை 31, 2025 வரை ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட மேலதிக விசாரணையின் விளைவாக, திங்கள்கிழமை ரொம்பின் பகுதியில் சிறுவனின் உடல் புதைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

“சந்தேகநபர் மீது முந்தைய குற்றப் பதிவுகள் எதுவும் இல்லை, மேலும் சிறுநீர் பரிசோதனையில் அவர் போதைப்பொருளை உட்கொள்ளாதது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது,” என்று குமரேசன் மேலும் கூறினார்.

இந்த வழக்கு, சிறார் சட்டம் 2001, பிரிவு 31(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறது, குற்றம் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிக்கு அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதம், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.