பேங்காக், ஜூலை 29-

தாய்லாந்தில் நடந்த  சர்வதேச தேக்குவாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் பேராக் மாநில தேக்குவாண்டோ சங்கத்திலிருந்து எண்மர் பங்கேற்றனர்.

இவர்கள் நான்கு தங்கப் பதக்கங்கள், ஆறு வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் எட்டு வெண்கலப் பதக்கங்களை வென்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

இம்மாதம் 19 முதல் 20 ஆம் தேதி வரை பேங்காக்கில் நடைபெற்ற இப்போட்டியில் ஒன்பது நாடுகளைச் சேர்ந்த 2,100 பேர் பங்கேற்றனர் .

பதக்கங்களை வென்று நாடு திரும்பிய விளையாட்டாளர்களுக்கு நேற்றிரவு ஈப்போ மேரு ராயாவில் உள்ள தேக்குவாண்டோ மையத்தில் கௌரவிக்கும் நிகழ்வு மிகச் சிறப்பாக  நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மஇகா ஈப்போ பாராட் தொகுதி காங்கிரஸ் தலைவர் எஸ். ஜெயகோபி சிறப்பு வருகை புரிந்தார்.

இவர்களின் இந்த வெற்றி பேரா மாநிலத்திற்கு மட்டுமல்லாது ஒட்டு மொத்த மலேசியாவிற்கும் நற்பெயரைத் தேடித் தந்துள்ளதாக கடந்த 43 ஆண்டுகளாக இந்தத் துறையில் ஈடுபட்டுள்ள கிராண்ட்மாஸ்டர் டாக்டர் நாகராஜன் விசுவநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.

வருங்காலத்தில் தெக்குவாண்டோ விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையைஅதிகரிப்பதோடு இத்துறையை மேலும் மேம்படுத்தவும் உதவும் என்றார் ஏல்மா மலேசியா டேக்குவாண்டோ கிளப்பின் தலைவருமான அவர்.

இதுவரை 22 பயிற்சியாளர்கள் உட்பட ஏழு மாநிலங்களில் 5,000திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயிற்சி பெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

ஈப்போவில் மட்டும் 10 பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருவதாகவும் இவற்றின் வழி 500 மாணவர்கள் பயிற்சி பெற்று வருவதாகவும் அவர் விவரித்தார்.

“இந்த கிளப்பில் இணையும் மாணவர்களில் பெரும்பாலோர் 3 முதல் 15 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்”.

ஒவ்வொரு முறையும் சுக்மா போட்டியில் இந்த கிளப்பில் இருந்து விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வருவது பெருமை அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.