சுபாங் ஜெயா, ஜூலை 30-

சுபாங் ஜெயா புத்ரா ஹைட்ஸ்சில் உள்ள சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியில் 47ஆவது விளையாட்டுப் போட்டி அண்மையில் விமரிசையாக நடைபெற்றது.

இப்போட்டியை சிலாங்கூர் பாலர் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் மணிசேகர் சீரங்கன் சிறப்புரையாற்றி அதிகாரபூர்வமாக தொடக்கி வைத்தார்.

நவீன மயமான தோற்றத்தோடு அமைந்துள்ள இப்பள்ளியில் தங்களது பிள்ளைகளை பாலர் பள்ளி மற்றும் முதலாம் ஆண்டிற்கு பதிவு செய்யும்படி இவ்வட்டாரத்திலுள்ள பெற்றோர்களுக்கு மணிசேகர் அழைப்பு விடுத்தார்.

இப்போட்டிக்காக மாணவர்களை சிறப்பான முறையில் தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும், தலைமையாசிரியர் லதா அவர்களுக்கும் மணிசேகர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

சிலாங்கூரில் புதிதாக திறக்கப்பட்ட இந்த பள்ளியில் இவ்வாண்டுக்கான விளையாட்டுப் போட்டியை மிகவும் குறுகிய காலத்தில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கு துணையாக இருந்த பள்ளி ஆசிரியர்கள், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர் வாரியம் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் தலைமையாசிரியை லதா தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.

ஒட்டு மொத்த மாணவர்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய இந்த விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டு மேலும் சிறந்த முறையில் நடைபெறும் என்றும் அவர் உறுதியளித்தார்.

மாணவர்களை கற்றல் கற்பித்தல் முறையில் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கையிலும் அவர்களை வெற்றிகரமாக தயார்படுத்தும் முயற்சியில் ஆசிரியர்கள் கடுமையாக பாடுபட்டு வருகின்றனர். அவர்களின் இந்த முயற்சிக்கு பெற்றோர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தேவை என்பதையும் லதா வலியுறுத்தினார்.