பீகார், ஜூலை 30-
நல்ல பாம்பு ஒன்று தன்னைத் தாக்க வந்தபோது அதனைப் பிடித்து, தலையைக் கடித்துத் துப்பிய 2 வயது பாலகனின் செய்கை உலகையே பிரமிக்க வைத்துள்ளது.
இச்சம்பவம் இந்தியா, பீகாரில், பங்காட்வா எனும் கிராமத்தில் நடந்தது.
தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த கோவிந்த குமார் என்ற 2 வயது சிறுவனை நல்ல பாம்பு ஒன்று தீண்ட முற்பட்டபோது, அதனைப் பிடித்து அதன் தலைப் பகுதியைக் கடித்துத் துப்பிய பின்னர் சிறுவன் மயக்கமுற்று சரிந்துள்ளான்.
அண்டை அயலாரின் உதவியோடு அந்தச் சிறுவன் மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டு தகுந்த சிகிச்சை தரப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாள்களுக்குப் பின்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளான்.
பாம்பின் விஷம் சிறுவனின் ரத்த நாளங்களில் செல்லாததால் அவன் உயிர் தப்பியதாக அறியப்பட்டது.
இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 2 மில்லியன் பேர் வரை பாம்புக் கடியினால் பாதிக்கப்படுவதாகவும் அதனால் ஏற்படும் இறப்பும் அதிகரித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
-பொன் முனியாண்டி

