2026 சிலாங்கூர் சுக்மா போட்டியிலிருந்து தமிழர் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை நீக்கியது ஏற்புடையதல்ல என உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்களான பாலமுருகன் வீராசாமி மற்றும் அருள்மொழி ஆனந்த தமிழன் முனியாண்டி ஆகிய இருவரும் தெரிவித்தனர்.
கடந்த சரவாக் சுக்மாவில் அரங்கேறிய சிலம்பம் தற்போது சிலாங்கூர் சுக்மாவில் இடம்பெறாதது, ஆயிரக்கணக்கான சிலம்ப விளையாட்டாளர்களின் கனவை சிதைக்கும் செயலாகும்.
சுக்மாவில் மலாய்க்காரர்களின் “சீலாட்” சீனர்களின் “உசு” அரங்கேறும் போது தமிழ் சமுதாயத்தின் அடையாளமாகவும் போர்களையின் மூலமாகவும் இருக்கும் சிலம்பத்தை மட்டும் நீக்கிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சின் செயலானது திட்டமிட்ட ஓர் இன ஒதுக்கல் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என்றனர்.
பேச்சில் மட்டுமே மலேசியர்கள் அனைவரும் சமம், அனைவரும் என் பிள்ளைகள் என்று முழங்கும் இப்புதிய அரசு அமைந்தது முதல் தற்போது வரை தமிழ் சமூகத்தின் உரிமைகள் பறிபோய்க்கொண்டே போகின்றன. மக்களும் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
ஆகையால், மேலும் தமிழ் சமூகத்தின் வெறுப்புக்கு ஆளாகாமல் இருக்க சுக்மாவில் சிலம்பத்தை நிரந்தரமாக்கும் திட்டத்தை அரசு கையாள வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்புச் செயலகம் மற்றும் மலேசிய தமிழ்ச்சமயப் பேரவை சார்பில் தமது கூட்டறிக்கையில் கேட்டுக் கொண்டனர்.

