ஜொகூர் பாரு:

மலேசியாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ‘ஆர்டிஎஸ்’ விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் 65% விழுக்காடு நிறைவு பெற்றுள்ளதாகப் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.

இந்த மாதத்திற்குள் முதல் ரயில் வந்து சேரும் என்றும் டிசம்பர் மாதத்தில் சோதனை இயக்கம் தொடங்கப்படும் என்றும் இன்று அந்தோனி லோக் உறுதிப்படுத்தினார்.

திட்டத்தின் செயல்பாட்டை நேரடியாகப் பார்வையிட்ட பின், அந்தோனி லோக் தற்போதைய அடைவுநிலைகளை விரிவாக விளக்கினார்.

உயர்மட்டப் பாலம் (viaduct) 91 விழுக்காடு, புக்கிட் சாகார் ரயில் நிலையம் 73 விழுக்காடு மற்றும் புக்கிட் சாகார் குடிநுழைவு, சுங்கச்சாவடி, தடைக்காப்பு வளாகக் கட்டமைப்பு பணிகள் 77 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

‘ஆர்டிஎஸ்’ இணைப்புத் திட்டத்திற்கான பணிகள் 2026ஆம் ஆண்டு டிசம்பரில் நிறைவடையும் என்றும் 2027-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ரயில் சேவை தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

முதன்மையான பணிகள் நிறைவடைந்த நிலையில், போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று முதல்முறையாகத் திட்டத்தின் செயல்பாட்டை நேரடியாகப் பார்வையிட்டார்.

ஆரம்பக் கட்ட சோதனை ஓட்டங்கள் பொதுமக்களுக்குத் திறக்கப்படாது என்றும், இஃது அமைப்பு ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு சோதனை, மற்றும் சிக்னல் பரிசோதனைக்கு மிகவும் முக்கியமானது என்றும் லோக் வலியுறுத்தினார்.