பெட்டாலிங் ஜெயா:
ஜகாட் மல்டிவெர்ஸ் மலேசிய இந்திய இளைஞரின் மாறும் அடையாளத்தையும் மனநிலையையும் பிரதிபலிக்கின்றன என்று ஜகாட் திரைப்படத்தின் இயக்குநர் சன்-ஜே பெருமாள் தெரிவித்தார்.
மேலும், ஜகாட் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளான நிலையில் தற்போது ஜகாட் மல்டிவெர்ஸ்: மாச்சாய், புளூஸ் ஆகிய இரு திரைப்படங்களை சன்-ஜே பெருமாள் இயக்கியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஜகாட் தோட்டப் புறத்திலிருந்து நகர வாழ்க்கைக்கு மாறும் மாற்றத்தைப் பேசியது.
மாச்சாய் வாழ்வியல் மற்றும் ஊழலை மையமாகக் கொண்டுள்ள நிலையில் புளூஸ் கலை, சினிமா உலகில் நிகழும் போராட்டத்தை வெளிப்படுத்துகிறது.
ஜகாட், மாச்சாய், புளூஸ் ஆகிய மூன்றும் வெவ்வேறு கதைகள் என்றாலும் அவை அனைத்தும் மலேசியாவில் வாழும் இந்திய இளைஞரின் மனநிலை, வாழ்க்கை தேர்வுகள் என்ற ஒரே முக்கியக் கருத்தை ஆராய்கின்றன என்று சன்-ஜே பெருமாள் கூறினார்.
இத்திரைப்படத்தின் நாயகனாக கர்ணன் நடித்துள்ள நிலையில் இர்ஃபான் ஸைனி, ரூபினி சம்பந்தன் போன்றவர்கள் துணை நடிகர்களாக நடித்துள்ளதாக சன்-ஜே பெருமாள் கூறினார்.
மாச்சாய் திரைப்படம் நவம்பர் 13-ஆம் தேதியும் புளூஸ் திரைப்படம் டிசம்பர் 4-ஆம் தேதியும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளன.
முன்னதாக, நவம்பர் 7-ஆம் தேதி பெட்டாலிங் ஜெயாவில் உள்ள Lotus Fivestar திரையரங்கில் மாச்சாய், புளூஸ் ஆகிய இரு திரைப்படங்கள் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது.

