கோலாலம்பூர்:

மலேசிய இந்து ஆலய அமைப்புகளின் பேரவை மஹிமா இன்று இலக்கவியல் ஆலய நிர்வாக அமைப்பை அறிமுகப்படுத்தியதுடன், GRASP SOFTWARE SOLUTION SDN.BHD நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.

நாடு நவீன தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்கும் நிலையில், ஆலயங்களும் அதில் பின் தங்கக் கூடாது. ஆலய நிர்வாகம் முழுமையாக இலக்கவியல் முறையில் செயல்படும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாக மஹிமா தலைவர் டத்தோ ந.சிவக்குமார் தெரிவித்தார்.

அர்ச்சனைகள் தொடங்கி நிதி உதவிகள் வரை அனைத்தும் இலக்கவியல் முறையில் மேற்கொள்ளப்படும்.

இதன் மூலம் பக்தர்கள் அர்ச்சனை சீட்டுகள், விளக்குகளைக் கியோஸ்க் இயந்திரத்தில் நாணயமற்ற முறையில் வாங்கிக் கொள்ளலாம் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் டத்தோ ந.சிவக்குமார் கூறினார்.

மேலும், மஹிமாவின் கீழ் உள்ள ஆலயங்களுக்கு தேவையான கியோஸ்க் உபகரண செலவை மஹிமா ஏற்கும்.

ஆனால் ஆலய நிர்வாகம் தொடர்ச்சியான தொழில்நுட்ப பராமரிப்பிற்காக GRASP SOFTWARE SOLUTION SDN.BHD நிறுவனத்திற்கு மாதாந்திர கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.

தற்போது 70 ஆலயங்கள் இதற்கு பதிவு செய்துள்ளதாக 200-க்கும் மேற்பட்ட ஆலயங்களில் இந்த கியோஸ்க் இயந்திரத்தை அமைக்க மஹிமா இலக்கு கொண்டுள்ளதாகவும் டத்தோ ந.சிவக்குமார் தெரிவித்தார்.