கோலாலம்பூர்:

மலேசியாவில் உள்ள இந்திய இளவரசர்களுக்கு இலக்கவியல் மற்றும் இணையப் பாதுகாப்பு (Cybersecurity) துறையில் புதிய பயிற்சி வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி நவம்பர் மாத நடுவில் ஆரம்பமாக உள்ளது.

இப்பயிற்சி திட்டத்தை ஏம் டிரெய்னிங் அகாடமி ஒருங்கிணைத்து, டி.சி.எஸ். ஆதரவுடன், பிரதமர் துறை முன்முயற்சியுடன், சிலாங்கூர் இந்திய வர்த்தகச் சங்கம் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது.

2 வாரங்கள் பயிற்சி பட்டறை நடைபெறும் நிலையில் அதன்பின் 2 மாதங்கள் உள்ளகப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சிக்கான கட்டணம் 1,000.00 ரிங்கிட், பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததும் முழுவதும் திரும்ப வழங்கப்படும்.

தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்த விரும்பும் தனிநபர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப (IT) மாணவர்கள் பங்கேற்கலாம்.

ஆரம்பக் கட்டமாக 30 பேர் பங்கேற்கின்றனர். வரவேற்பு அதிகரிக்கும் பட்சத்தில் பங்கேற்பாளர் எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய செய்தியாளர் சந்திப்பில் இணையப் பாதுகாப்பு துறையில் தற்போது 27,000 வேலை வாய்ப்புகள் உள்ளன. தற்போது 18,000 பேர் மட்டுமே வேலை செய்யும் நிலையில் உள்ளனர். இதை 27,000 ஆக உயர்த்தும் இலக்குடன் நாம் செயல்பட்டு வருகிறோம். இந்தியர்களுக்கு இத்துறையில் சிறப்பு பயிற்சி வழங்கி, அவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாக்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என்று TCS பிரதிநிதி தெரிவித்தார்.

“இலக்கவியல் சந்தையில் நம் மாணவர்கள் பங்கேற்கும் வாய்ப்புகளை உருவாக்கி, இந்திய சமூக முன்னேற்றம் மற்றும் தொழில்முறை திறன் மேம்பாட்டில் பங்களிப்பது இந்த திட்டத்தின் நோக்கம்,” என்று பிரதமரின் இந்திய விவகாரங்களுக்கான சிறப்பு அதிகாரி சண்முகன் மூக்கன் கூறினார்.

“இந்த திட்டம் இந்திய இளைஞர்களுக்கு தொழில்நுட்ப திறன்களை மேம்படுத்தும் முக்கிய வாய்ப்பாகும். பயிற்சி முடிந்ததும், அவர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்,” என்று கிள்ளான் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.