பேரா மாநிலத்தில் முஸ்லிம் அல்லாத சமூகங்களுக்கான நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மாநில அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில இந்திய விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ அ. சிவநேசன் தெரிவித்தார்.

வரும் 26ஆம் தேதி பேரா மாநில அரசு 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ள நிலையில், முஸ்லிம் அல்லாதோருக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ சராணி முகமட்டிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு இதற்காக 12 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டு 10 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டிருந்தது. அடுத்த ஆண்டு இன்னும் அதிக நிதி கிடைக்கும் என சுகாதாரம், மனிதவளம் மற்றும் ஒற்றுமை துறை பொறுப்பாளரும், சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ அ. சிவநேசன் நம்பிக்கை தெரிவித்தார்.

மாநிலத்தில் அரசு நிலங்களில் அமைந்துள்ள கோயில்கள், துண்டாடப்பட்ட தோட்ட நிலங்களில் வசிக்கும் இந்தியர்களின் நில உரிமை பிரச்சினை, புறம்போக்கு நிலங்களில் வாழும் மக்களின் சவால்கள் ஆகியவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும் அவர் கூறினார். “சவால் விட வேண்டாம்” எனவும் அவர் எச்சரித்தார்.

இந்தியர்களின் நலன், கோயில்கள் மற்றும் தமிழ்ப்பள்ளிகளுக்கு தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படுவதாகவும் அவர் விளக்கினார்.

நேற்று மாலை கம்பார், மெம்பாங் டி ஆவாங்கில் மாலிம் நாவார் சட்டமன்ற உறுப்பினர் பவாணி வீரையா ஏற்பாடு செய்த தீபாவளி திறந்த இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர் இவ்வாறு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

முன்னதாக உரையாற்றிய பவாணி வீரையா, தொகுதியில் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியை முன்னிட்டு திறந்த வீடு நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், இம்முறை மூவின மக்களும் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டார்.