ஈப்போ, நவ. 16-

பேரா மாநில அரசாங்கத்தின்   ஏற்பாட்டில்  திருமுருகன் மாநாடு பேரா , கம்போங் கப்பாயாங் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நாட்டின்  முதலாவது திருமுருகன் மாநாடு எனும் வரலாற்றை இம்மாநாடு கொண்டிருப்பதாக மாநில சுகாதாரம்,மனிதவளம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுதுறை ஆட்சிக்குழு உறுப்பினரான டத்தோ அ. சிவநேசன்  குறிப்பிட்டார்.

இம்மாநிலம்  வெளி  மாநிலங்களுக்கு அப்பால்   தமிழகத்தில் இருந்தும் முருக பக்தர்கள் இம்மாநாட்டில்  கலந்து கொண்டதை  இம்மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில்  அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழ்க் கடவுள் முருகனின் புகழ் பேரா மாநிலத்தில் மட்டுமின்றி நாடெங்கும்   மணக்கச் செய்யும் வகையில் மிகப் பெரிய சமய மாநாடாக இந்நிகழ்ச்சி திகழ்ந்ததாக சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான டத்தோ சிவநேசன் விவரித்தார்.

இந்த மாநாடு நேர்த்தியாக நடந்தேறுவதை உறுதிப்படுத்தும் வகையில்  இதற்கான அனைத்து செலவுகளையும்  மாநில அரசு ஏற்றுக் கொண்டதாக அறியப்படுகிறது.

இதன் வெற்றிக்கு இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், கல்லுமலை ஆலயம், கம்போங் கப்பாயாங் ஸ்ரீ சிவசுப்பிரமணியர் ஆலயம், ஆசிரியர்கள் மன்றம், பொது மக்கள் என பல தரப்பினர்  பேராதரவு வழங்கியிருப்பதாகச் சொன்னார்.

இவர்களின் ஆதரவைத் தொடர்ந்து அடுத்தாண்டு பல்கலைக்கழக, கல்லூரி மாணவர்கள் என அதிகமான இளைஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

“முருகனும் வாழ்வியலும்” என்னும் கருப்பொருளோடு நடைபெற்ற இம் மாநாட்டில்   முனைவர் மு.சங்கர் ஆய்வுக் கட்டுரை படைத்தார்.

சங்கரத்னா தர்மபூஷன் சிவ ஸ்ரீ அ.ப.முத்துகுமார சிவாச்சாரியார்  மற்றும் விவேகரத்னா சொல்லின் செல்வர் சிவ ஸ்ரீ நா.தினேஸ்வர்மன் குருக்கள் ஆகியோரின் சொற்பொழிவுகள் மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

பேரா மாநிலத்தில் அமைந்துள்ள தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கான தமது உதவிகள் தொடரும் என்றும் சிவநேசன் உறுதியளித்தார்.

இது வரை தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு வழங்கப்பட்ட நிதிக்கான மாதிரி காசோலை இந்நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

டாக்டர் பண்பரசி,  கனிமொழி சகோதரிகளின்  சொல்ல சொல்ல இனிக்குதடா முருகா எனும் நாட்டிய நாடகம் இம்மாநாட்டிற்கு மேலும்  மெருகூட்டியது.