ஷா ஆலம் நவ 25-

சிலாங்கூரில் பெய்து வரும் அடை மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களமிறங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டிருப்பது  பாராட்டுக்குரியது என்றார் சிலாங்கூர் மாநில பிபிபி கட்சித் தலைவர் டாக்டர் எம். சுரேந்திரன்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் கிடைக்க ஏதுவாக  சிலாங்கூர் அரசாங்கம் உரிய ஏற்பாடுகள் செய்யும் என்று  டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

அதிகாரிகள்,  ஆட்சிக்குழு உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும்  களமிறங்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கிள்ளான், ஷா ஆலம், மேரு, சபாக்  பெர்ணம், ஸ்ரீ மூடா உட்பட பல பகுதிகள்  வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட மக்கள் உடனடியாக வெள்ள நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட வேண்டும்.அவர்களுக்குத்  தேவையான உதவிகளை சிலாங்கூர் அரசு  வழங்க வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டார்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி  நேரடியாக களத்தில் இறங்கி உதவி புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்  அரசு அதிகாரிகளுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியும் தயார் நிலையில் இருப்பதாக டாக்டர் சுரேந்திரன் குறிப்பிட்டார்.