நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் சுதந்திரமாக செயல்படும் உரிமையை பாதிக்கும் எந்தவொரு நடவடிக்கையும், நடைமுறையில் உள்ள சட்ட விதிகளுக்கு முரணானதாகக் கருதப்படலாம் என்று சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேலாண்மையில் காப்பீட்டு நிறுவனங்கள், தகாஃபுல் சேவை வழங்குநர்கள் மற்றும் மூன்றாம் தரப்பு நிர்வாகிகள் (TPA) ஈடுபடுவது தொடர்பாக எழுந்துள்ள கவலைகளைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தை அமைச்சு தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்துக் ஸ்ரீ டாக்டர் துல்கெஃப்லி அக்மத் கூறினார்.
இவ்வகையான தலையீடுகள், மருத்துவர்களின் மருத்துவத் தீர்மானங்களை பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும், அதனை அமைச்சு ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.

