புத்ராஜெயா, பிப் 9-
வழிப்பாட்டு தலங்கள் அனைத்தும் சட்டத்தின் வரம்பிற்குள் செயல்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.

ஒற்றுமை அமைச்சு நடத்திய மாதாந்திர சந்திப்புக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், வழிப்பாட்டு தலங்களைச் சுற்றியுள்ள பிரச்சினைகளுக்கு உணர்ச்சிவசப்படாமல், தீர்வை நோக்கிய அணுகுமுறையே சரியானது என்றார்.

“தீர்வுக்குச் சிக்கல் காண்பதே உகந்த தீர்வு. இது தன்னுடைய ஆட்சியில் மட்டும் நடப்பதாக கூறுவது சரியல்ல,” என அவர் குறிப்பிட்டார்.

மேலும், மற்றவர்களின் நிலத்தில் அனுமதி இன்றி வழிப்பாட்டு தலங்களை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அனுமதி பெறாமல் நிலத்தை பயன்படுத்தி பின்னர் உரிமை கோருவது தவறான நடைமுறையாகும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

சட்டத்தை மதித்து, சமூக ஒற்றுமையை காக்கும் வகையில் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அமைதியாக ஆலோசித்து, நீடித்த மற்றும் சமநிலையான தீர்வை காண வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்தார்.