கோலாலம்பூர்:

பாரம்பரியமும் பண்பாட்டுச் செழுமையும் கலந்த பரதநாட்டியம் நடனம், நளினம், பாவணை மற்றும் துல்லியமான அசைவுகளால் தனித்துவம் பெற்ற கலைவடிவமாகத் திகழ்கிறது.

அந்தக் கலையைத் திறம்பட கற்ற உடன்பிறந்த அக்கா-தங்கைகளான செல்வி யெஷோத்ரா கோபி கிருஷ்ணன் மற்றும் செல்வி பவதார்ணி கோபி கிருஷ்ணன் ஆகியோரின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி டெம்பிள் ஆஃப் பைன் ஆர்ட்ஸில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பாரத கலா சிகாமணி, ஆடல் அரசு, நர்த்தன நடனமாமணி குருஸ்ரீ டாக்டர் சந்திரமோகன் ராமசாமி மற்றும் நட்டுவ திலகம் ஶ்ரீமதி இந்திரா மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இதனையடுத்து, செல்வி யெஷோத்ரா கோபி கிருஷ்ணன் மற்றும் செல்வி பவதார்ணி கோபி கிருஷ்ணன் ஆகிய இருவரும் தங்கள் பரதநாட்டிய அரங்கேற்றத்தை நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களையும் பெற்றுள்ளனர்.

நந்திதா ஆர்ட்ஸ் நடனப் பள்ளி மாணவிகளான இருவரும், நடன ஆசிரியை ஶ்ரீமதி ஹேமநந்தினி ரகுராமன் அவர்களிடம் பயிற்சி பெற்றவர்கள் ஆவர்.

செல்வி யெஷோத்ரா கோபி கிருஷ்ணன் 2012ஆம் ஆண்டு தனது 9 வயதில் பரதநாட்டியப் பயிற்சியில் இணைந்து கடந்த 14 ஆண்டுகளாக தொடர்ந்து பயின்று இவ்வாண்டு தனது அரங்கேற்றத்தை நிறைவு செய்தார். மேலும், அவர் கட்டிடக்கலைத் துறையில் பட்டம் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல், செல்வி பவதார்ணி கோபி கிருஷ்ணன் 2012ஆம் ஆண்டு தனது 7 வயதில் பரதநாட்டியப் பயிற்சியைத் தொடங்கினார். அவர் தற்போது தற்போது நாட்டிங்காம் பல்கலைக்கழகத்தில் கணிதம் மற்றும் தரவியல் அறிவியல் துறையில் உயர்கல்வியைப் பயின்று வருகிறார்.

மாணவிகள் இருவரும் நளினம், பாவணை மற்றும் துல்லியமான அசைவுகளுடன் பரதநாட்டியத்தை ஆடி பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

பெற்றோர்களான கோபிகிருஷ்ணன்-கலைவானி, நடன ஆசிரியை ஶ்ரீமதி ஹேமநந்தினி ரகுராமன் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.