செர்டாங், மார்ச் 9:

மலேசிய இந்து சங்கத்தின் செர்டாங் வட்டார ஏற்பாட்டில், நாடாளுமன்ற அளவிலான ஆலயங்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று (8.3.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை ஸ்ரீ நவசக்தி துர்க்கை அம்மன் ஆலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முக்கியப் பிரதிநிதிகள் பங்கேற்பு
இக்கூட்டத்தில் மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் சிவகாசி சங்க பூசன் தங்க கணேசன் சிறப்பு வருகையாளராகக் கலந்து கொண்டார். மேலும், ம.இ.ச சிலாங்கூர் மாநிலத் தலைவர் தொண்டர் மாமணி அசோகன் மூக்கன், சிலாங்கூர் மாநில ஆலயப் பிரிவுத் தலைவர் திரு. அழகேந்திரா, கல்வி மற்றும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு. சந்துரு கணேசன், செர்டாங் வட்டாரத் தலைவர் திரு. ரகு ரங்கன், பழைய பிரிவுத் தலைவர் திரு. தர்மராஜ், நாடாளுமன்ற உதவியாளர் திரு. ராஜா, மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் சட்டமன்ற இந்தியப் பிரதிநிதி திருமதி சுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவர்களுடன் செர்டாங் வட்டாரச் செயற்குழு உறுப்பினர்களும், 17 ஆலயங்களின் தலைவர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.

தேசியத் தலைவரின் சிறப்புரை
கூட்டத்தில் உரையாற்றிய தேசியத் தலைவர் தங்க கணேசன், “நமது கலாச்சாரப் பொக்கிஷமான இந்து ஆலயங்களைச் சனாதன தர்ம அடிப்படையில் முறையாகப் பராமரிக்க வேண்டும். தோட்டப் புறங்களில் ஆரம்பிக்கப்பட்ட பல ஆலயங்கள் இன்று நிலச் சிக்கல்களால் பெரும் அச்சுறுத்தலைச் சந்தித்து வருகின்றன,” எனக் கவலை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் சில அதிர்ச்சிகரமான தரவுகளைப் பகிர்ந்து கொண்டார்:

“சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் தரவுப்படி, மாநிலத்தில் முறையான அனுமதியின்றி மொத்தம் 688 ஆலயங்கள் உள்ளன. இதில் 413 ஆலயங்கள் அரசு நிலத்திலும், 275 ஆலயங்கள் தனியார் நிலத்திலும் அமைந்துள்ளன. நாடு தழுவிய அளவில் இதுவரை மலேசிய இந்து சங்கத்தின் கீழ் 2560 ஆலயங்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. இது மிகவும் கவலைக்குரிய விஷயம்.”

“சமய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் என 36 அமைப்புகள் ஒன்றிணைந்து, அடுத்த 6 முதல் 12 மாத காலத்திற்குள் இந்த ஆலயப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அரசாங்கத்திடம் ஒருமித்த கோரிக்கையை முன்வைக்க உள்ளோம். நிலச் சிக்கல் உள்ள ஆலயங்கள் அரசு அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு உரிய பட்டாவைப் பெற முயற்சி செய்ய வேண்டும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாநிலத் தலைவர்களின் கருத்து
சிலாங்கூர் மாநிலத் தலைவர் அசோகன் மூக்கன் பேசுகையில், பல ஆலயங்கள் தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை வெளிப்படையாகச் சொல்லத் தயங்குவதாகவும், அந்தத் தயக்கத்தைக் கைவிட்டு மலேசிய இந்து சங்கத்தை அணுக வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மாநில ஆலயப் பிரிவுத் தலைவர் திரு. அழகேந்திரா, தனியார் நிலங்களில் இயங்கும் ஆலயங்கள் மற்றும் நிலப் பட்டா சிக்கல்களைச் சட்ட ரீதியாக எப்படிக் கையாள்வது என்பது குறித்து விளக்கமளித்தார். மாநிலம் மற்றும் வட்டார ரீதியாகத் திரட்டப்படும் தரவுகளைக் கொண்டு தேசிய அளவில் ஒரு மாபெரும் நிகழ்வை நடத்தி, நாட்டின் பிரதமரிடம் மனு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஒற்றுமையே தீர்வு
மாநிலக் கல்வி மற்றும் தொழில்நுட்பப் பிரிவுத் தலைவர் திரு. சந்துரு கணேசன் தனது உரையில், “ஆலயத் தலைவர்கள் மற்றும் இந்திய இயக்கங்களின் சிந்தனையும் செயலும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்த மலேசியத் திருநாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும்,” எனத் தெரிவித்தார்.