மிலான், அக்.16 –

இத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான மிலான் டார்பி ஆட்டத்தில் இண்டர் மிலான் 3 – 2 என்ற கோல்களில் ஏ.சி. மிலானை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் இண்டர் மிலானின் மாவ்ரோ இக்கார்டி மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரீக் சாதனையைப் படைத்துள்ளார்.

80 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற ஆட்டத்தில் இக்கார்டி 28 , 63 ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களைப் போட்டார். ஆட்டத்தின் இறுதி நிமிடத்தில் இக்கார்டி தனது ஹாட்ரீக் கோலைப் போட்டார். ஏ.சி மிலானின் இரண்டு கோல்களை 38 ஆவது நிமிடத்தில் சுசோவும், 81 ஆவது நிமிடத்தல் கியாகாமோ பொனாவென்டூராவும் போட்டனர்.

புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நப்போலியைக் காட்டிலும் மிலான் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இவ்விரண்டு அணிகளும் அடுத்த வாரத்தில் மோதவிருக்கின்றன. இத்தாலி சிரி ஆ லீக் போட்டியில் இதுவரை நடைபெற்ற எட்டு ஆட்டங்களிலும் வெற்றியைப் பதிவுச் செய்து நப்போலி முதலிடத்தில் உள்ளது.