கோலாலம்பூர்:

இந்திய சமூகத்திற்காக, இந்திய சமூக உருமாற்றப் பிரிவு – மித்ரா மூலம் கூடுதலாக ரிம50 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்தார்.

மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை என்றாலும், அந்த நிதி எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது குறித்து தெளிவான விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“தர்மா மடானி” என்ற பெயரில் அறிவிக்கப்பட்ட சில திட்டங்கள், கடந்த ஆண்டு ரிம100 மில்லியன் ஒதுக்கீட்டின் தொடர்ச்சிதான் எனத் தெரியவந்துள்ளதாகக் கூறிய அவர், புதிய ரிம50 மில்லியன் எந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும், அதன் செயல்பாட்டு கால அட்டவணை என்ன, மக்களுக்கு அதன் பயன் எப்போது கிடைக்கும் என்பதைக் அரசு விளக்க வேண்டும் என்றார்.

கடந்த ஆண்டு மித்ரா திட்டங்களின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பழைய அல்லது புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விமர்சனம் முன்வைத்ததாகவும், அதற்கான விளக்கங்கள் திருப்திகரமாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி, தொழில்நுட்ப திறன், தொழில் முனைவோர் வளர்ச்சி, பெண்கள் மற்றும் இளைஞர் முன்னேற்றம் போன்ற துறைகளில் நீண்டகால பலன் தரும் திட்டங்களுக்கே மித்ரா நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அரசியல் விளம்பரம் அல்லது வாக்கு சேகரிப்பு நோக்கங்களுக்காக அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

அரசை ஆதரிப்பது என்பது குறைகளைப் புறக்கணிப்பதல்ல என்றும், ஆரோக்கியமான ஜனநாயகத்தில் ஆக்கப்பூர்வமான விமர்சனம் ஒரு பொறுப்பாகும் என்றும் கணபதிராவ் கூறினார்.

“ஒவ்வொரு ரிங்கிட்டும் மக்களிடம் சென்று உண்மையான மாற்றத்தை உருவாக்குவதை உறுதி செய்வதே நமது கடமை” என அவர் வலியுறுத்தினார்.