மூவார்:
சிங்கப்பூரில் வேலை செய்து வசித்து வரும் ஜொகூரைச் சேர்ந்த மலேசியர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் தாயகத்திற்குத் திரும்பி வந்து வாக்களிக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் கூறுகையில், ஜொகூரில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாநில மற்றும் கூட்டரசு அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தொடர்வதை உறுதிப்படுத்த ஒவ்வொரு வாக்கும் முக்கியமானது என்றார்.
“ஒவ்வொரு வாக்கும் முக்கியம். அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். சிறிது நேரம் ஒதுக்கி சிங்கப்பூரிலிருந்து குழந்தைகளுடன் திரும்பி வந்து வாக்களியுங்கள்,” என அவர் தெரிவித்தார்.
ஜொகூரின் புக்கிட் பக்ரி பகுதியில் நடைபெற்ற ‘ஜொகூர் மக்களுக்கான நீதி’ பொதுக்கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
ஜொகூர் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்து, மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பல முக்கிய திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அவற்றில் முக்கியமானதாக ஜொகூர்–சிங்கப்பூர் சிறப்பு பொருளாதார மண்டலம் (ஜேஎஸ்–எஸ்இஇஸெட்) திட்டத்தை குறிப்பிட்டார். இந்தத் திட்டம் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான நெருங்கிய ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இந்த திட்டம் புதிய முதலீடுகளை ஈர்த்து, ஜொகூர் இளைஞர்களுக்கு அதிக வருமானம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திறன் கொண்டதாக அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், இந்த திட்டம் குறித்து முதலில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ சியென் லூங் உடனும், பின்னர் தற்போதைய பிரதமர் லாரன்ஸ் வோங் உடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அன்வார் தெரிவித்தார்.
அதேபோல், தஞ்சுங் பெலெபாஸ் துறைமுகம் விரிவுபடுத்தப்படுவதாகவும், ஃபாரஸ்ட் சிட்டி திட்டமும் ஜொகூர் பொருளாதார வளர்ச்சிக்காக தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
மலேசியா–சிங்கப்பூர் இடையேயான இந்த மூலோபாய ஒத்துழைப்புகள் ஜொகூரை நாட்டின் முக்கிய முதலீட்டு மற்றும் வர்த்தக மையமாக வலுப்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வளர்ச்சி திட்டங்களின் பயன் முதலீட்டாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களுக்கும் வேலைவாய்ப்பு, பொதுச் சேவைகள் மற்றும் வாழ்க்கைத் தர உயர்வு வழியாக சென்றடைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

