ஜோர்ஜ்டவுன், அக். 20- 

ஊழல் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள ஜனநாயக செயல் கட்சியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் அக்கட்சியின் மறுதேர்தலில் போட்டியிடக் கூடாது என்று மக்கள் மாற்றுக் கட்சியின் உதவித் தலைவர் ரஹ்மாட் இஷாக் வலியுறுத்தியுள்ளார்.

உயர்நெறி மற்றும் கௌரவத்தின் அடிப்படையில் அவர் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அக்கட்சியின் உயர்மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் போட்டியிடக் கூடாது.

இந்த மறுதேர்தலில், 2012ஆம் ஆண்டுக்கான பெயர் பட்டியலே பயன்படுத்தப்படும் என்றாலும் பினாங்கு மாநில முதலமைச்சருமான அவர் ஒருபோதும் இத்தேர்தலில் போட்டியிடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
அவருக்கு எதிராக இரண்டு ஊழல் குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டிருந்த போதிலும் தனது முதலமைச்சர் பதவியை அவர் துறக்காமல் இருந்தாலும்கூட, வரும் கட்சித் தேர்தலில் அவர் போட்டியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

கட்சியின் 20 உயர்மட்டப் பதவிகளுக்கான 3ஆவது மறுதேர்தல் முடிவுற்றப் பின்னரும்கூட அவர் கட்சியின் முக்கியப் பதவிகளை வகிப்பதை தவிர்க்க வேண்டுமென்றும் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார். கட்சி மற்றும் ஒரு மாநிலத்தின் முக்கியப் பதவியை வகித்து அவரும் குவான் எங் தனது உயர்நெறி, மரியாதை, கௌரவம், நம்பகத் தன்மை ஆகியவற்றை முன்வைத்து அவர் இம்முடிவை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

இந்த மறுதேர்தலில் கடந்த 2012ஆம் ஆண்டுக்கான பெயர் பட்டியல் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற சங்கங்களின் பதிவு இலாகா எடுத்துள்ள முடிவை அவர் காரணமாகக் காட்டக் கூடாது. மாறாக, கட்சி மற்றும் சொந்த கௌரவத்தைக் கருத்தில் கொண்டு அவர் விவேகமான முறையில் முடிவெடுக்க வேண்டும் என்றார். லிம் குவான் எங் இல்லாவிட்டாலும்கூட ஜசெகவின் நிர்வாகம் சீராகவே அமைந்திருக்கும். காரணம் ஜசெக இதுவரை 2 தேர்தல்களை நடத்தி அது செல்லாமல் போனதற்கும் அவர் அக்கட்சியின் தலைமைச் செயலாளராக இருந்த காலக் கட்டத்தில்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜசெகவின் மறுதேர்தல் வரும் நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஷா ஆலாமிலுள்ள ஐடியல் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும் என்று அண்மையில் தலைநகரில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் லிம் அறிவித்திருந்தார்.