ஜோர்ஜ்டவுன், அக். 21-

தேசிய அளவிலான பெருநாள் காலங்களில் டோல் கட்டணக் கழிவுகள் வெவ்வேறாக இருப்பது தொடர்பில் பிளஸ் மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தை 2 பயனீட்டாளர் சங்கங்கள் கடுமையாகச் சாடின. இம்முறை தீபாவளித் பெருநாளுக்கு 20 விழுக்காடு மட்டுமே கழிவு வழங்கப்பட்ட வேளையில், நோன்புப் பெருநாளுக்கு 30 விழுக்காடு கழிவும் சீனப் புத்தாண்டுக்கு 50 விழுக்காடு கழிவும் வழங்கப்பட்டிருப்பதாக பினாங்கு பயனீட்டாளர்கள் சங்கத்தின் அதிகாரி என்.வி சுப்பாராவ் தெரிவித்தார்.

நாட்டின் அனைத்துப் பெருநாள்களுக்கும் டோல் கழிவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஆனால் இந்த தீபாவளிக்கு ஏன் குறைந்த விகிதத்தில் கழிவு வழங்கப்பட்டது தெரியவில்லை. இருந்த போதிலும் அனைத்துப் பெருநாள் காலங்களிலும் டோல் கழிவு 50 விழுக்காடு விதிக்கப்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன் என பத்திரிகையாளர்களிடம் சுப்பாராவ் குறிப்பிட்டார்.

இதனிடையே, டோல் ஒப்பந்த நிறுவனங்கள் பின்பற்றும் அணுகுமுறை தங்களுக்கு மனநிறைவை அளிக்கவில்லை என சுபாங் மற்றும் ஷா ஆலம் பயனீட்டாளர் சங்க தலைவர் ஜோர்ஜ் ஜேக்கப் தெரிவித்தார். அதற்கு பதிலாக பெருநாள் காலங்களில் விதிக்கப்படும் டோல் கட்டணத்தையும் பிளஸ் நிறுவனம் அகற்ற வேண்டும். இப்போது நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கையும் முழுமையாக அதிகரித்து விட்டதால் கோலாலம்பூரிலிருந்து பினாங்கிற்குச் செல்ல 4 மணி நேரம் ஆகிறது.

இதில் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டால் சாலைகளின் எண்ணிக்கை, பாதிக்கப்பட்ட சாலைப் பகுதி ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அதிகப்படியான சாலைக் கட்டண வசூலிப்பைத்தான் பிளஸ் மேற்கொள்கிறது. அதனால் பொது விடுமுறைக் காலங்களில் வாகனங்கள் சாலைகளில் இலவசமாக செல்வதற்கு அனுமதிப்பதுதான் சிறந்தது என நான் கருதுகிறேன். இதற்கு முக்கியக் காரணம் ஓட்டுநர்களுக்கு இலவச சாலை சேவை என்று ஏதும் வழங்கப்படுவதில்லை. பொதுவாக நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவது ஓட்டுநர்கள் தாங்கள் போக வேண்டிய இடத்திற்கு விரைவில் சென்றடைவதற்கே ஆகும்.

இதில் பெருநாள் காலங்களின் போது இலவச சாலைப் பகுதியைத் தருவித்து ஓட்டுநர்கள், பயணிகளின் பாராட்டுகளை பிளஸ் நிறுவனம் பெறலாம். அப்படி தேவைப்பட்டால் இவ்வாறு நிகழ்வதற்கு வாய்ப்பிருக்கிறது என பத்திரிகையாளர்களிடம் ஜேக்கப் குறிப்பிட்டார்.