சென்னை:

தீபாவளியன்று வெளியான நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் அரசியல் வசனங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் படத்தில் மருத்துவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விஜய் சாடியிருந்தார். மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் மயம் ஆகியவற்றின் பாதிப்பும் படத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இது விஜய்-யின் அரசியல் படமாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் கருதுகிறார்கள். ஆனால், மத்திய அரசை குறை கூறியிருப்பதற்காக நடிகர் விஜய்க்கு பா.ஜனதாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. விஜய்யை தாக்கி கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மெர்சல் படத்தை பா.ஜ.க அரசியலாக்கி இருப்பதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி மெர்சல் பட கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு ஆகியோரைத் தொடர்ந்து கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் மெர்சல் படத்திற்கு ஆதரவாக டுவிட்டரில் இன்று கருத்து தெரிவித்தார். ‘மிஸ்டர் மோடி, திரைப்படம் என்பது தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழியின் ஆழமான வெளிப்பாடு ஆகும். மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதன் மூலம் தமிழின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யாதீர்கள்’ என ராகுல் காந்தி நேரடியாக பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிட்டு டுவீட் செய்திருந்தார்.

இந்நிலையில், ராகுலின் கருத்தை அடுத்து அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில், “ உங்களது காங்கிரஸ் ஆட்சியின் துணையோடு லட்சக்கணக்கான மக்கள் இலங்கையில் கொல்லப்பட்ட போது, எங்கே போனீர்கள் ராகுல்? ” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.