லண்டன், அக்.22 –

2017/18 ஆம் பருவத்துக்கான இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடெட் தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.இதுவரை நடைபெற்ற எட்டு ஆட்டங்களில் தோல்வியே காணத மென்செஸ்டர் யுனைடெட் 1 – 2 என்ற கோல்களில் ஹடேர்ஸ்பீல்ட் அணியிடம் தோல்வி கண்டது.

28 ஆவது நிமிடத்தில் ஹடேர்ஸ்பீல்ட் அணியின் முதல் கோலை ஆரோன் மூய் போட்டார். ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர் லோரேன்ட் டேப்போய்ட்ரே இரண்டாவது கோலைப் போட்டு ஹடேர்ஸ்பீல்ட் அணியை 2 -0 என்ற நிலையில் வைத்தார். ஹடேர்ஸ்பீல்ட் அணியின் தற்காப்பு அரணை உடைக்க மென்செஸ்டர் யுனைடெட் கடும் முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும் அந்த முயற்சிகள் பலனைத் தரவில்லை. இரண்டாம் பாதியில் ஆட்டத்தின் நிலையை மாற்றியமைக்க, மென்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஜோசே மொரின்ஹோ, மார்கோஸ் ராஷ்போர்ட்டையும், ஹென்ரி மிக்கிதேரியனையும் நுழைத்தார்.எனினும் மென்செஸ்டர் யுனைடெட் அணியால் ஒரு கோல் மட்டுமே போட முடிந்தது.

2 -1 என்ற நிலை ஆட்டம் முடியும் வரை நீடித்தது. 1952 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக ஹடேர்ஸ்பீல்ட் அணி, மென்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியுள்ளது. இந்த தோல்வியால் மென்செஸ்டர் யுனைடெட், பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் மென்செஸ்டர் சிட்டியைக் காட்டிலும் ஐந்து புள்ளிகளில் பின் தங்கியுள்ளது.