சென்னை, அக்.23 – 

இயக்குனர் ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் சாமி 2 படத்தில் இருந்து விலகுவதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.  கதையில் தமது கதாபாத்திரம் குறித்து இயக்குனருடன் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருப்பதால் அந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக த்ரிஷா தமது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டில் மே மாதம் வெளிவந்த சாமி திரைப்படம் விக்ரமின் திரை வாழ்க்கையில் மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக அமைந்தது. கே . பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்மாத தொடக்கத்தில் ஹரி  மீண்டும் தொடங்கினார். இம்முறை த்ரிஷாவுடன் கீர்த்தி சுரேஷையும் இரண்டாம் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்திருந்தார்.  கீர்த்தி சுரேஷ் கேரக்டரை விட த்ரிஷாவின் கேரக்டர் பெரிய அளவில் இல்லாததால்  படத்தில் இருந்து விலகும் முடிவை த்ரிஷா எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் த்ரிஷாவின் இந்த முடிவுக்கு அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். புவனா மாமி கேரக்டரில் உங்களை தவிர வேறு யாராலும் நடிக்க முடியாது என்றும், உங்கள் முடிவை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும் என்றும் கமெண்டில் கூறி வருகின்றனர். த்ரிஷாவின் முடிவு மாறுமா?