முகப்பு > சமூகம் > புந்தோங் சட்டமன்றத்தை தாரை வார்க்கிறதா ம.இ.கா.?
சமூகம்முதன்மைச் செய்திகள்

புந்தோங் சட்டமன்றத்தை தாரை வார்க்கிறதா ம.இ.கா.?

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியை மைபிபிபி கட்சிக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றது மஇகா. மாறாக ஒரே ஒரு சட்டமன்றத் தொகுதி உறுப்பினரை இந்தியர்கள் மட்டுமே தேர்தெடுக்கும் அதிகாரத்தை கொண்ட புந்தோங் தொகுதியை இழக்குமென அரசியர் வல்லுநர்கள் கூறுகின்றார்கள்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ கேவியஸ் கடந்த சில ஆண்டுகாலமாக கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் தமது பயணத்தை தொடர்ந்து வருகிறார். ம.இ.கா.வின் முன்னாள் தலைவரான டத்தோஸ்ரீ பழனிவேலின் வசமுள்ள அந்தத் தொகுதியை மீண்டும் தக்கவைத்துக் கொள்ள ம.இ.கா. உறுதியாக உள்ளது. குறிப்பாக அத்தொகுதியின் ஒருங்கிணைப்பாளராக ம,இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் சந்திரன் நியமிக்கப்பட்டார்.

அன்றுமுதல் இன்றுவரை கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டு, இந்தியர்கள் மட்டுமின்றி அனைத்து இனத்தவர்களின் ஆதரவை பெற்று வருகிறார். இந்நிலையில் அண்மையில் ம.இ.கா.வின் 71ஆவது மாநாட்டை தொடக்கி வைத்த பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், ம.இ.கா.விற்கு வழங்கப்பட்ட தொகுதிகளில் மாற்றம் ஏற்படாது என உத்தரவாதம் அளித்தார். இந்நிலையில், கேமரன் மலை ம.இ.கா.விற்குதான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால் கேமரன் மலை தொகுதிக்கு பதிலாக இந்தியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும், குறிப்பாக இந்தியர்கள் மட்டுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் கொண்ட புந்தோங் தொகுதியை ம.இ.கா. இழக்கக்கூடுமென பரவலாகப் பேசப்படுகின்றது.

புந்தோங் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் மைபிபிபி கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் டத்தோ நரேன் சிங் தொடர்ந்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதோடு மைபிபிபி கட்சியில் புந்தோங் வாசிகளையும் உறுப்பினராக இணைத்து வருகின்றார்.

புந்தோங் சட்டமன்றம் என் 30

2008ஆம் ஆண்டு வரை புந்தோங் தொகுதியை மசீச கொண்டிருந்தது. அவ்வாண்டு நடந்த தேர்தலில் புந்தோங் மக்கள் தேசிய முன்னணி அரசு மீது, அதிருப்தி கொண்டிருந்த காரணத்தினால், மசீச படுதோல்வியைச் சந்தித்தது. அந்தத் தேர்தலில் ஜசெக சார்பில் போட்டியிட்ட சிவசுப்ரமணியம் 10,311 வாக்குகளைப் பெற்ற வேளையில் மசீச சார்பில் போட்டியிட்ட லீ துங் லாய் 4996 வாக்குகளைப் பெற்றார். 5395 வாக்குகள் வித்தியாசத்தில் சிவசுப்ரமணியம் புந்தோங் தொகுதியை கைப்பற்றினார்.

2013ஆம் ஆண்டு நடந்த தேர்தலில், சிவசுப்ரமணியத்தை எதிர்த்து, அப்போது ம.இ.கா. இளைஞர் பிரிவின் செயலாளராக இருந்த சிவராஜ் புந்தோங் தொகுதியில் போட்டியிட்டார். புந்தோங்கில் பிறந்தவரான சிவராஜ், இந்தியர்களின் வாக்குகளை திரட்ட முடிந்தது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அத்தேர்தலில் சிவசுப்ரமணியம் 13,062 வாக்குகளைப் பெற்ற வேளையில், சிவராஜ் சந்திரன் 4433 வாக்குகளை பெற்றார். இத்தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராக போட்டியிட்ட செபஸ்தியன் 261 வாக்குகளையும் முகமட் பஸ்ரி 127 வாக்குகளையும் மட்டுமே பெற்றனர்.

2013ஆம் ஆண்டு புந்தோங் தொகுதியில் வாக்களித்தவர்களில் 48 விழுக்காடு இந்தியர்கள், 44 விழுக்காடு சீனர்கள், இதர 6 விழுக்காடு மலாய்க்காரர்கள் ஆவர். இந்தியர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்றத் தொகுதியான புந்தோங்கை ம.இ.கா. விட்டுக் கொடுத்தால், இந்தியர்களின் ஆதரவு தேசிய முன்னணிக்கு திரும்பி விட்டது என்று எப்படி கூற முடியுமென அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். இந்தியர்களின் தொகுதியான புந்தோங்கை விட்டுக் கொடுத்தால், இந்தியர்களையும் விட்டுக் கொடுப்பதற்கு சமம்.

14ஆவது பொதுத் தேர்தலில் புந்தோங் தொகுதியை மைபிபிபி கட்சிக்கு விட்டுக் கொடுத்தால், மீண்டும் அந்த தொகுதி ம.இ.கா.விற்கு வழங்கப்படுமா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறிதான். இந்நிலையில் தொகுதி மாற்றம் குறித்த பேச்சு வார்த்தைக்கு ம.இ.கா. தயார் என அதன் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.

அதில் புந்தோங் சட்டமன்றத் தொகுதி, கோத்தா ராஜா, காப்பார் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளை ம.இ.கா. விட்டுக் கொடுக்குமென கூறப்படுகின்றது. 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதால், இன்னும் சில வாரங்களில் முக்கிய அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன