அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > சுட்டெறிக்கும் வெயில்; உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

சுட்டெறிக்கும் வெயில்; உடல்நலத்திற்கு முன்னுரிமை அளிப்பீர்!

கோலாலம்பூர், அக். 23-
அண்மைய காலமாக மலேசியாவில் வெப்ப நிலை கடுமையாக அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, நகர்புறங்களில் வாழும் பலர் சுட்டெறிக்கும் வெயிலில் வெளியே செல்வதற்கு தயங்குகின்றனர். கார்களில் செல்பவர்களுக்கு இது பெரிய பிரச்னையாக இருக்காது. ஆனால், மோட்டார் சைக்கிள்களில் வேலைக்கு செல்பவர்கள், அருகாமையிலுள்ள பகுதிகளுக்கு நடந்து செல்கின்றவர்களுக்கு இது பெரும் சோதணையாகவே இருக்கும்.

இந்நிலையில் கொளுத்தும் வெயிலில் பொதுமக்கள் தங்களின் உடல்நலத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும்படி அனேகன்.காம் இணையத்தள பதிவேடு கேட்டுக்கொள்கின்றது. குறிப்பாக, பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பொதுமக்கள் மேற்கொள்வது அவசியமாகும். அதாவது, வெளியில் செல்லும் போது வெயிலின் தாக்கத்தை குறைக்க தொப்பியை அணிந்து கொள்ளலாம் அல்லது குடையை பயன்படுத்தலாம். இதன் வாயிலாக, வெயிலின் தாக்கம் நம் உடல் மீது படுவதை குறைக்க முடியும்.

அதேவேளையில், பொதுமக்கள் இக்காலக்கட்டத்தில் அதிகமான தண்ணீரை குடிக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகின்றனர். அதிகமான தண்ணீரை குடிப்பதன் வாயிலாக வெயிலால் நம் உடல் சூடாகும் போது தண்ணீர் குளுமைப்படுத்தும். மேலும், பொதுமக்கள் மெல்லியானதாகவும் வெளிச்சமாகவும் தளர்வாகவும் இருக்கக்கூடிய ஆடைகளை அணிவது அவசியமாகும்.

உடல் வெப்பத்தை குறைப்பதற்கு மின்விசிறி அல்லது குளிரூட்டியை (air-cond) பயன்படுத்தலாம். இதனை தவிர்த்து குளிரூட்டி வசதியில்லாத கார்களில் அதிக நேரம் உட்கார்ந்திருப்பதையும் பொதுமக்கள் தவிர்ப்பது நல்லது. மேலும், வெளிப்புற நடவடிக்கைகளை முடிந்த வரையில் குறைத்து விட்டு வீட்டில் ஓய்வெடுக்கலாம். அதோடு, காப்பி, மதுபானம், அதிக இனிப்புகள் கொண்ட பானங்களையும் பொதுமக்கள் தவிர்ப்பது நல்லதாகும்.

இதற்கிடையே, கடும் வெயிலால் தோல் வியாதி, மயக்கம் உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்நோக்குபவர்கள் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன