அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > நம்பிக்கை கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தில் டோல் கட்டணம்-ஜிஎஸ்டி நீக்கம்!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

நம்பிக்கை கூட்டணியின் வரவு செலவுத் திட்டத்தில் டோல் கட்டணம்-ஜிஎஸ்டி நீக்கம்!

கோலாலம்பூர், அக். 25-
மக்களின் சுமையை குறைக்கவும் நாட்டின் பொருளாதார பிரச்னைக்கு தீர்வு காணும் வகையிலும் 5 அம்ச முதன்மை திட்டங்களை வரையறுத்து நம்பிக்கை கூட்டணி 2018ஆம் ஆண்டிற்கான மாதிரி வரவு செலவு திட்டத்தை இன்று தாக்கல் செய்துள்ளது. இந்த வரவு செலவு திட்டத்தில் மொத்த செலவினங்களாக 258.52 பில்லியன் வெள்ளி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் 200.16 பில்லியன் வெள்ளி நிர்வாகத்திற்கும் 58.35 பில்லியன் வெள்ளி மேம்பாட்டிற்கும் பயன்படுத்தப்படும் என அதன் வரவு செலவு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

‘விவேகமாகச் செலவு செய்து, வரியை நீக்கி ஹாராப்பானை தேர்வு செய்வீர் எனும் கருப்பொருளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த திட்டம் 20 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ள நிதி விரயம், ஊழல் ஆகியவற்றை ஒழிக்கவும் பிரதமர்துறைக்கான நிதியின் செலவுகளை குறைக்கவும் இலக்கு கொண்டுள்ளது. அடுத்தாண்டிற்கான மாற்று பட்ஜெட் என்பது நாட்டின் 14ஆவதுப் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள வாக்காளர்களுக்கு நம்பிக்கை கூட்டணி தருவிக்கக்கூடிய நிழல் பட்ஜெட் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா வான் இஸ்மாயில் தமது அறிக்கையில் தெரிவித்தார்.

இதில் டோல் கட்டணம் நீக்குதல் உட்பட மக்கள் வாழ்க்கைச் செலவினங்களை உள்ளடக்கியப் பல்வேறு விவகாரங்கள் இடம்பெற்றுள்ளன. அதோடு மட்டுமின்றி 120 நாட்களுக்குப் பிரசவ விடுமுறை, ஆண் பெண்களுக்கிடையே சமமான சம்பளம், பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி, கிளந்தான், திரெங்கானு, சபா, சரவா மாநிலங்களுக்கு 20 விழுக்காடு வரையிலான எண்ணெய் ராயல்டி, கிழக்கு மலேசிய மேம்பாட்டிற்கு வெ.7,500 கோடி நிதியும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பிடிபிடிஎன் கடனுவி திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்கள் தங்களின் வருமானம் 4000 வெள்ளியை அடைந்த பின்னரே அதனை திருப்பி செலுத்த வலியுறுத்தும் வகையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன