கோலாலம்பூர், அக். 26-
அரசியல் காழ்ப்புணர்ச்சிகளின் அடிப்படையில் பினாங்கு துணை முதல்வரின் அரசியல் செயலாளரும், செபராங் பிறை நகராண்மைக்கழக உறுப்பினருமான சத்தீஸ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் ஆகியோர் என் நிறுவனம் (pes systems(m)sdn bhd மற்றும் சில நிறுவனங்களை சித்தரித்து சமூக வலைத்தளங்களில் அவதூறுகள் பரப்பியுள்ளார்கள். அதற்கு எதிராக தான் டாங் வாங்கி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளதாக மஇகாவின் உதவித்தலைவர் டத்தோ டி.மோகன் தெரிவித்தார்.

என் நிறுவனத்திற்கு மஇகாவின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் மூலமாக அரசாங்க குத்தகைகள் கிடைத்ததாக அவதூறு பரப்பப்பட்டுள்ளது. அதில் துளியளவும் உண்மை இல்லை. அதே நேரத்தில் அப்படி கிடைத்திருந்தாலும் தவறேதும் இல்லை. மஇகாவினர்கள் இந்தியர்கள் தானே? அவர்கள் வெளிநாட்டினரா? முறையான ஆவணங்கள் இருப்பின் குத்தகைகள் கிடைத்தால் தவறா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இந்தியர்களுக்கு குத்தகைகள் கிடைக்கவில்லை என்கிறோம். ஆனால் அதே குத்தகை மஇகாவை சார்ந்தவர்களுக்கு கிடைத்தால் அதன் மீது சந்தேகம் கொள்கிறோம் இந்த மன நிலை மாற வேண்டும். நமது சமூகத்தில் மஇகாவினர் மீது அரசியல் காரணங்களுக்காக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பாக பரப்புவதை சிலர் கலாச்சாரமாக கொண்டுள்ளார்கள் அது ஆரோக்கியமானது அல்ல என அவர் கூறினார்.

4 நிறுவனங்கள் சார்ந்து சித்தரிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற நிறுவனங்களைப் பற்றி எனக்கு தெரியவில்லை. எனது நிறுவனத்தின் பெயர் குறிப்பிடப்பட்டதன் தொடர்பில் புகார் செய்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் டத்தோ டி.மோகன் கூறினார்.