இஸ்லாமிய – நன்னெறிக் கல்வி பாடத்தில் பாலியல் கல்வி

0
5

கோலாலம்பூர், அக். 26 –
இஸ்லாமிய – நன்னெறிக் கல்விப் பாடத் திட்டத்தில் பாலியல் கல்வியை இணைத்துக் கொள்வது குறித்து கல்வி அமைச்சு பரிசீலித்து வருகிறது. அதன் தொடர்பில், சிறார் கல்வியில் நிபுணத்துவம் பெற்றவர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாகக் கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ மாஹ்ட்ஸிர் காலிட் தெரிவித்தார்.

எனினும், அந்தக் கல்வியைப் போதிக்கும் சரியான அணுகுமுறையைக் கண்டறிவது அவசியமென மாஹ்ட்ஸிர் தெரிவித்தார்.  அண்மையில், தேசிய சிறார் மன்றக் கூட்டத்தில், பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டுமென, மகளிர் குடும்ப சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ ரொஹானி அப்துல் கரீம் பரிந்துரைத்திருந்தார். அது குறித்து மாஹ்ட்ஸிர் செய்தியாளர்களிடம் கருத்துரைத்தார்.

இதனிடையே, இவ்வாண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான கணக்கெடுப்பின்படி நாட்டில் 2,996 பள்ளிகள் குறைந்த மாணவர்களைக் கொண்டிருக்கின்றன. அவற்றுள் 360 தமிழ்ப்பள்ளிகள் 150-க்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருப்பதாக மாஹ்ட்ஸிர் தெரிவித்தார். 2,058 தேசிய பள்ளிகளும், 578 சீனப் பள்ளிகளும், அந்தச் சிக்கலை எதிர்கொண்டிருக்கின்றன.

ஆண்டுக்கு 200 கோடி வெள்ளியை அரசு அவற்றுக்காகச் செலவிடுகிறது. ஆயினும், பெற்றோரின் அனுமதியின்றி, அந்தப் பள்ளிகளை அரசாங்கம் மூட எண்ணம் கொண்டிருக்கவில்லை என அவர் தெரிவித்தார்.