அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > செலாயாங் பாசார் போரோங்கில் அந்நியர் ஆதிக்கம்
முதன்மைச் செய்திகள்

செலாயாங் பாசார் போரோங்கில் அந்நியர் ஆதிக்கம்

கோலாலம்பூர், ஜூலை 19-

செலாயாங் பாசார் போராங்கில் அந்நியர்கள் ஆதிக்கம் பெருகி வருவதால் தங்களின் வர்த்தகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அங்கு பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வரும் காந்திபன், மணி பொன்னுசாமி, லோகநாதன் சுப்ரமணியம், பாருக் சாரங்கபாணி, ஜோன் வனத்தியன், ஜோன்சன் மூர்த்தி ஆகியோர் நேற்று முறையிட்டனர்.

இந்த மொத்த வியாபார மார்க்கெட்டில் அந்நியர்கள் குறிப்பாக மியன்மார் பிரஜைகள் ஆதிக்கம் பெருகிவிட்ட நிலையில் காலம் காலமாக அங்கு வியாபாரம் செய்து வரும் இந்தியர்கள் நிலை கேள்விக் குறியாகிவிட்டது என்று அவர்கள் தெரிவித்தனர். இந்த மார்க்கெட்டைச் சுற்றி கிட்டத்தட்ட 30 ஆயிரம் மியன்மார் பிரஜைகள் வசிப்பதாக தெரியவருகிறது. இவர்களில் 80 விழுக்காட்டினர் அந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்கின்றனர்.

உண்மையில் இவர்கள் 1997ஆம் ஆண்டு முதல் 3 தலைமுறையாக இந்த மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். உள்ளூர் வியாபாரிகளின் வாய்ப்புகளையும் இவர்கள் தட்டிப் பறித்துவிடுகின்றனர். இது நியாயமா என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். உள்ளூர் வியாபாரிகள் 4,000 வெள்ளி கொடுத்து கடையை வாடகைக்கு எடுத்தால் இந்த அந்நிய பிரஜைகள் 6,000 வெள்ளி கொடுத்து கடையை வாடகைக்கு எடுக்கும் நிலை உள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

அதோடு தக்காளி உள்ளிட்ட காய்கறிகளுக்கும் மீன்களுக்கும் விலை கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் தான் இவற்றை விற்கவேண்டும். ஆனால் இந்த அந்நியர்கள் அந்த நிபந்தனையை புறக்கணித்துவிட்டு கூடுதல் விலைக்கு அவற்றை விற்பனை செய்வதும் தெரியவருகிறது. இது பற்றி பல முறை அதிகாரிகள் தரப்பிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இவர்கள் பற்றி யாராவது கேள்வி எழுப்பினால் இவர்கள் முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளன. இவர்கள் ஐ.நா. அகதிகள், அடையாள அட்டையை வைத்துக் கொண்டு தொழில் செய்கின்றனர். அந்நியர்கள் எப்படி வியாபாரம் செய்யமுடியும்? அவர்களுக்கு அனுமதி கொடுத்தவர்கள் யார் என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை தெரியவில்லை. ஆகவே, அரசாங்கம் இதை கருத்தில் கொண்டு அந்நிய ஆதிக்கத்திலிருந்து செலாயாங் பாசார் போரோங்கை விடுவிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன