புதன்கிழமை, ஜனவரி 29, 2020
அண்மையச் செய்திகள்
முகப்பு > மற்றவை > வாட்சாப்பில் கதறிய தமிழக பிரஜையை போலீஸ் அழைத்து சென்றது!
மற்றவைமுதன்மைச் செய்திகள்

வாட்சாப்பில் கதறிய தமிழக பிரஜையை போலீஸ் அழைத்து சென்றது!

கோலாலம்பூர், அக். 26-
மலேசியாவுக்கு தன்னை வேலைக்கு அழைத்து வந்தவர் சம்பளம் வழங்காமல் அடித்து துன்புறுத்துவதாகவும் இன்னும் சில மணி நேரங்களில் தாம் கொல்லப்பட்டு விடுவேன் என வாட்சாப்பில் கதறிய தமிழக பிரஜையை காஜாங் போலீஸ் அழைத்து சென்றதாக மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் (பிரிமாஸ்) தலைவர் முத்துசாமி திருமேனி தெரிவித்தார்.

மெய்கண்டன் (வயது 34) என்று அடையாளம் கூறப்பட்ட அந்த தமிழக பிரஜை வாட்சாப்பில் கதறிய காணொளி முகநூல் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களிலும் இந்தியாவின் இணையத்தள ஊடகங்களிலும் பெரும் வைரலானது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட முத்துசாமி தனது செயற்குழுவினருடன் காஜாங்கிலுள்ள ஓர் உணவகத்தில் அந்த தமிழக பிரஜையை நேரில் சென்று சந்தித்ததாக தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட தமிழக பிரஜை வேலை செய்ததாக கூறப்படும் உணவகத்தின் உரிமையாளரும் ஒரு தமிழக பிரஜையாவார். அவர் தற்போது தமிழ்நாட்டிற்கு சென்றிருப்பதால் அந்த உணவகத்திலுள்ள மற்றொரு தமிழக பிரஜையும் மேற்பார்வையாளருமான ஒருவருக்கும் மெய்கண்டனுக்கும் இடையில் 50 வெள்ளி தொடர்பான பிரச்னை எழுந்துள்ளது. இந்த பிரச்னையை தொடர்ந்து அவர்களுக்குள்ளேயே ஒரு அடிதடி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர்தான், மெய்கண்டன் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார்.

அவரிடம் சம்பளம் பற்றி வினவிய போது முதலாளி தனது சம்பளத்தை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் அவர் கூறும் இடத்தில் தாம் கையெழுத்திட்டு கொடுப்பதாகவும் அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட காணொளியில் தனது முதலாளி சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமையாக வைத்திருந்ததாக கூறிய மெய்கண்டன், நேரடியாக முதலாளியை பற்றி நாங்கள் கேட்ட போது அவரை பற்றி தவறாக ஏதும் கூறவில்லை. அவருக்கு தனது சம்பளம் பற்றிய முழுமையான தகவல்கூட தெரியவில்லை.

தமிழ்நாட்டிலிருந்து தனது முதலாளிதான் பயண கடப்பிதழ் எடுத்துக்கொடுத்து இங்கு அழைத்து வந்ததாக கூறிய மெய்கண்டன், தற்போது அந்த கடப்பிதழை 1000 வெள்ளிக்கு ஒருவரிடம் அடமானம் வைத்திருப்பதாகவும் தன்னை தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கும்படியும் கேட்டார். அதன் பின்னர், அவரது பயண கடப்பிதழை மீட்டு அவரை தமிழ்நாட்டிற்கு அனுப்ப உதவுவதாக அங்கிருந்த ஒருவர் தெரிவித்தார். நாங்களும் எங்களுடன் வரும்படி மெய்கண்டனை அழைத்த போது அவரும் குளித்துவிட்டு தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வந்தார். ஆனால், அந்த சமயம் அங்கே வந்த காஜாங் மாவட்ட போலீஸ் அதிகாரிகள் மெய்கண்டனையும் அவரை தாக்கியதாக கூறப்பட்ட மற்றொருவரையும் விசாரணைக்காக அழைத்து சென்றனர். இந்தியரின் உணவகம் சார்ந்த பிரச்னை என்பதால் நாங்கள் உதவ முன்வந்தோம். ஆனால், இப்பொழுது போலீஸ் அவரை அழைத்து சென்றுவிட்டதால் இனி, சட்டப்படியான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்வார்கள் என முத்துசாமி கூறினார்.

மேலும், மலேசியாவிற்கு வேலைக்குவரும் தமிழக பிரஜைகள் இங்கு வருவதற்கு முன்பே வேலைக்கான பெர்மிட்டை பெற வேண்டும். மெய்கண்டனுக்கு முறையான பெர்மிட்டுகள் ஏதும் இல்லை. அதோடு, தனது சம்பளம், முதலாளி பற்றிய முழுமையான தகவல் ஏதும் அவருக்கு தெரியவில்லை. நாங்கள் விசாரித்ததில் அவர் எங்கும் முறையாக வேலை செய்யவில்லை என்றும் எல்லா இடங்களிலும் பிரச்னைகள் செய்துவிட்டு வருவதாகவும் அவர் மீது குற்றம் சாட்டுகின்றனர். வேலை செய்ய வந்த இடத்தில் இதுப்போன்று நடந்துக்கொள்வது மிக தவறு என முத்துசாமி குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன