பெட்டாலிங் ஜெயா, அக். 27-
சர்ச்சைக்குரிய சமய போதகரான ஜாக்கிர் நைய்க் சட்டத்திற்கு புறம்பான அமைப்பிற்கு தலைமை வகித்ததாகவும் ஐ.எஸ். போன்ற அனைத்துலக தீவிரவாத கும்பலில் சேரும்படி இளைஞர்களை தூண்டியதாகவும் அவர் மீது இந்தியாவின் தேசிய துப்பறிவு நிறுவனம் (என்.ஐ.ஏ) குற்றம் சாட்டியுள்ளது.

அவர் வேண்டுமென்றே இந்து, கிருஸ்தவம், இஸ்லாமிய பிரிவுகளான ஷியா, சூஃபி, பாரெல்வி ஆகியவற்றை இழிவுபடுத்தி யதாக அந்நாட்டின் டெ டைம்ஸ் ஆப் இந்தியா (டி.ஓ.ஐ) செய்தி வெளியிட்டுள்ளது. அவரது சமய பரப்புரைகளிலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் ஆட்களை சேர்க்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜாக்கிருக்கு சொந்தமான இஸ்லாமிய ஆய்வு அறவாரியம் (ஐ.ஆர்.எப்) மற்றும் ஹார்மோனி மீடியா எனப்படும் நிறுவனமும் ஆகியவை மீதும் ஜாக்கிர் மீதான குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாளேடு தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் தடை விதிக்கப்பட்ட ஐ.ஆர்.எப் ஆறவாரியம் பல சமய மக்களிடையேயும் இஸ்லாமிய பிரிவுகளிடையேயும் வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

ஜாக்கிர் மீதான குற்றச்சாட்டு அறிக்கையில் அவர் கடந்த 1994ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் சுமார் 1,5000 பேருக்கும் அதிகமானோர் கலந்துக்கொள்ளும் கருத்தரங்குகளில் உரையாற்றியதாக கூறப்பட்டுள்ளது. அவரது கருத்தரங்குகளிலும் அவரது ஐ.ஆர்.எப். சொந்தமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மற்ற சமயங்களை இழிவுபடுத்தும் கருத்துகள் இடம்பெற்றுள்ளது. சிடி, டிவிடி ஆகிய வடிவங்களில் அவரது உரைகள் உள்ளது. அவருடைய அறவாரியமும் நிறுவனமும் இதில் முக்கிய பங்காற்றியிருப்பதாக என்.ஐ.ஏ. கூறியதாக டி.ஓ.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

வன்முறை மற்றும் கள்ள பண முதலீடு ஆகிய குற்றச்செயல்கள் தொடர்பில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள இந்திய அரசாங்கம் தீர்மானித்தது. வங்காளதேசத்திலுள்ள டாக்காவில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்ட ஒருவன் ஜாக்கிரின் உரையால் தாம் கவர்ந்திழுக்கப்பட்டதால் இந்த செயலில் ஈடுபட்டதாக தெரிவித்தான். இதனால், வங்காளதேச அரசாங்கம் ஜாக்கிரின் பீஸ் டிவியின் ஒளிபரப்பை முடக்கியது. இதற்கிடையில், ஜாக்கிர் இந்தியாவிலிருந்து வெளியேறி தலைமறைவாகியதாக கூறப்படுகிறது.

கடந்த மே மாதம் இந்தியாவின் தேசிய துப்பறிவு நிறுவனம் ஜாக்கிரை கைது செய்வதற்கான சிவப்பு அறிவிப்பை வெளியிடும்படி அனைத்துலக போலீசிடம் (இண்டர்போல்) கோரிக்கையை முன்வைத்தது. இதன் வாயிலாக, ஜாக்கிர் அனைத்துலக கைதியாக அறிவிக்கப்படுவதோடு அவர் எந்த நாடுகளில் இருந்தாலும் அவரை அந்நாட்டு போலீஸ் கைது செய்ய முடியும். ஆயினும், தாம் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்தியாவின் அமலாக்க நிறுவனம் தன்னை குறி வைத்திருப்பதாக ஜாக்கிர் நைய்க் இண்டர்போலுக்கு ஒரு கடிதத்தை அனுப்பினார். அதோடு, தனது பரப்புரைகள் அமைதியை வலியுறுத்தியதாகவும் தாம் வன்முறையை ஆதரித்ததில்லை என்றும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல நாடுகளில் தாம் இஸ்லாம் சமயம் குறித்து உரை நிகழ்த்தி வருவதாகவும் அந்நாடுகள் தமக்கு பெரும் மதிப்பை வழங்குவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், ஜாக்கிர் இஸ்லாமிய துறை வல்லுநர் இல்லை என்றும் அவர் அந்த சமயத்தை பற்றி போதிய அறிவை கொண்டிருக்கவில்லை என்றும். என்.ஐ.ஏ. தெரிவித்தது. அதன் பின்னர், மலேசிய துணைப்பிரதமரும் உள்துறை அமைச்சருமாகிய டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி, ஜாக்கிர் நைய்க் மலேசியாவின் நிரந்தர பிரஜை அந்தஸ்தை கொண்டிருப்பதாக இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்தது பெரும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.