சென்னை:

அமெரிக்க நாட்டில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் செம்மொழிகளான 7 மொழிகளில் தமிழை தவிர மற்ற 6 செம்மொழிகளுக்கும் இருக்கைகள் உள்ளன. ஆனால் மூத்த மொழியான தமிழுக்கு அந்த இருக்கை இதுவரை அமையப் பெறவில்லை. ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தென்கிழக்கு ஆசிய கல்வித்துறையின் ஓர் அங்கமாக சங்கத்தமிழ் இருக்கை ஒன்றினை நிறுவுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் வாழும் டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய இருவரும் இறங்கினர்.

தமிழ் இருக்கைக்கான அனுமதி பெறுவதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.40 கோடி தேவை. இதில் ரூ.6 கோடியே 70 லட்சத்தை டாக்டர்கள் ஜானகிராமன், சம்பந்தம் ஆகிய 2 பேரும் வழங்கியுள்ளனர். மீதமுள்ள ரூ.33 கோடிக்கு அதிகமான நிதியை உலக தமிழர்களிடம் நன்கொடையாக திரட்டி வரும் நிலையில், தமிழக அரசு தன் பங்காக 10 கோடி ரூபாய் வழங்கி உள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சிக்காகவும், தமிழறிஞர்களின் நலனுக்காகவும் அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்கவாழ் தமிழர்களான மருத்துவர்கள் வி. ஜானகிராமன் மற்றும் திருஞானசம்பந்தம் ஆகியோர் அமெரிக்காவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழிருக்கை ஒன்றை ஏற்படுத்த முயற்சி மேற்கொண்டு நிதி திரட்டி வருகின்றனர்.

இது சம்பந்தமாக நிதியுதவி வேண்டி அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரியதன் தொடர்ச்சியாக அவர் 2016-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலின் போதுவெளியிடப்பட்டஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் சிறப்புகளை உலகெங்கும் கொண்டு செல்லும் வகையில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழுக்கென்று ஒரு தனி இருக்கை ஏற்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அவரது வழியில் செயல்படும்  தமிழ்நாடு அரசு,  இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் உலகத்தில் வாழும் அனைத்து தமிழ் சமுதாயத்தின் வேண்டுகோளினை பரிசீலனை செய்து, ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் பத்து கோடி ரூபாய் நிதி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த இருக்கையை ஏற்படுத்துவதன் மூலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தமிழ்மொழியை அடிப்படையாகக் கொண்டு இந்தியவியல் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளுதல்,  ஆராய்ச்சிக் கல்வியில் தமிழ் இலக்கியம், இலக்கணம், பண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளும் வகையில் மாணவர்களை உருவாக்குதல், அமெரிக்க நூலகங்களிலும், ஆவண காப்பகங்களிலும் உள்ள தமிழ் தொடர்பான ஆவணங்களை ஆய்வுக்கு உட்படுத்துதல், பதிப்பிக்கப்படாத ஆவணங்களை படியெடுத்து பதிப்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு பணிகள் மூலம் தமிழ்மொழியின் வளம் உலகறிய செய்ய வழிவகை ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.