முகப்பு > முதன்மைச் செய்திகள் > இந்தியர்களுக்கான பிரதமர் என்பதை நஜீப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்- டத்தோ சிவராஜ் சந்திரன்
முதன்மைச் செய்திகள்

இந்தியர்களுக்கான பிரதமர் என்பதை நஜீப் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்- டத்தோ சிவராஜ் சந்திரன்

கோலாலம்பூர், அக் 28-

2018ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்) இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்துள்ளார். குறிப்பாக இந்தியர்களுக்கான திட்டவரைவு வெறும் கண்துடைப்பல்ல! மாறாக இந்தியர் சமுதாயத்தின் மீது அவர் கொண்டிருக்கும் அக்கறை என்பதை இந்த பட்ஜெட் உறுதிப்படுத்தியுள்ளது என ம.இ.கா. இளைஞர் பிரிவுத் தலைவரும், கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியின் ஒருங்கிணைப்பாளருமான டத்தோ சிவராஜ் சந்திரன் கூறினார்.

பி.என்.பி. வாயிலாக ஒருவருக்கு அதிகபட்சம் 30,000 பங்குகள் என இந்தியர்களுக்காக மொத்தம் 1.5 பில்லியன் அமானா சஹாம் பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதோடு பி40 கீழ் உள்ள இந்திய சமுதாயம் பயன்பெறும் வகையில் 1 லட்சம் குடும்பங்களுக்கு தலா 5000 பங்குகள் என 500 மில்லியன் அமானா சஹாம் பங்குகள் முதலீட்டு உதவித் திட்டத்தையும் பிரதமர் அறிவித்துள்ளார். இந்த ஒதுக்கீடு இந்திய சமுதாயத்தின் மத்தியில் மிகப் பெரிய உருமாற்றத்தை கொண்டுவருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உயர்க்கல்விக்கூடங்கள், பொதுச்சேவைத் துறைகளில் இந்தியர்களின் எண்ணிக்கை  5 லிருந்து 7 விழுக்காடாக அதனை உயர்த்தப்படுமென பிரதமர் அறிவித்துள்ளார்.  இதற்கு முன்னதாக பிரதமர் பொறுப்பில் இருந்த எவ்ருமே இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதில்லை. இது பிரதமர் நஜீப் இந்திய சமுதாயத்தின் மீது கொண்டிக்கும் அக்கறையை காட்டுகின்றது என்றார் அவர்.

சமீபத்திய வரவு செலவுத் திட்ட அறிக்கையில், பிரதமர் நஜீப், இந்தியர்களின் வீட்டு வருமானம் சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருப்பதாகக் குறிப்பிட்டார். அது 6.8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது இந்தியர்களின் மேம்பாட்டிற்காக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் முன்னெடுத்த திட்டங்களின் அடிப்படையில் உயர்வு கண்டுள்ளது என டத்தோ சிவராஜ் கூறினார்.

கடந்த 2017 வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்தியர்களுக்கு முக்கியமான உதவிகள் மற்றும் சலுகைகள் கிடைத்தாலும், 2018 பட்ஜெட்டின் கீழ் உள்ள இந்தியர்களுக்கான திட்டம், இந்தியர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி வெறுமனே ஒரு தேர்தல் விந்தையானது அல்ல, மாறாக சமூகத்தின் பொருளாதார வலிமையை மேம்படுத்தும் நோக்கத்தை கொண்டுள்ளது.

இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்கு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வரும் நடப்பு அரசாங்கத்தை இந்திய சமுதாயம் ஆதரிக்க வேண்டும். எதிர்க்கட்சியினர் இந்திய சமுதாயத்திற்கு தேசிய முன்னணி எதுவும் செய்யவில்லை என்ற பிரசாரத்தை மேற்கொள்ளலாம். ஆனால் இந்திய சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக அரசு என்ன செய்தது என்பது தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்தியர்களுக்கான மேம்பாட்டு திட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என சிவராஜ் கூறினார். நாட்டின் மேம்பாட்டில் இந்தியர்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமரின் 2050 தொலைநோக்கு சிந்தனையில் இந்தியர்களும் அபார வளர்ச்சி பெறுவார்கள் என பட்ஜெட் குறித்து கருத்துரைத்த டத்தோ சிவராஜ் சந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன