காஜாங், அக். 28-
ஜாலான் ரெக்கோவிலுள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் பல்வேறு சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.  அவ்வகையில் இன்று அந்த ஆலயத்தின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் வசதி குறைந்த சுமார் 100 பேருக்கு சமயல் பொருட்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து மகளிர் பிரிவின் தலைவி ஜெசி கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்த ஆலயத்தின் மகளிர் பிரிவு வசதி குறைந்தவர்களுக்கு இத்தகைய உதவிகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக, சமயலுக்கு தேவையான தரம் வாய்ந்த பொருட்களை அவர்களுக்கு வழங்கி வருகிறோம். இதன் வாயிலாக, அவர்களுக்கு ஒரு வகையில் உதவி கிடைப்பதோடு அவர்களின் நிதி பிரச்னையில் எங்களால் முடிந்த உதவியை வழங்க முடிந்ததாக அவர் கூறினார். ஆலயங்கள் வழிபாட்டு தலமாக இருக்கின்ற வேளையில் இதுபோன்ற சமூகநல நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது அவசியமாகும் என ஜெசி கேட்டுக்கொண்டார்.

இதனிடையே, ஆலய தலைவர் டத்தோ கிருபாகரன் கூறுகையில், பல ஆண்டுகளாக இந்த ஆலயம் சமய வகுப்பு, தேவாரம், சங்கீதம், பரதநாட்டியம், யோகா, பாலர்பள்ளி முதலான வகுப்புகளை நடத்தி வருகின்றது. ஈ.டபுள்யூ.ஆர்.எப். அமைப்புடன் இணைந்து யூத் கேர் எனப்படும் இளைஞர்களுக்கான முகாமையும் கடந்த 8 ஆண்டுகளாக மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். சமூக நல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த போதிலும் நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கிவரும். எங்களுக்கு ஐ.பி.எப். கட்சியின் தேசியத் தலைவர் செணட்டர் டத்தோ எம்.சம்பந்தன் மத்திய அரசாங்கத்திடமிருந்து நிதியுதவியை பெற்று தருவதாக உறுதியளித்துள்ளார்.

எங்களுக்கு நிதியுதவிகள் கிடைத்தால் இன்னும் அதிகமான சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபடவும் தயாராக இருக்கின்றோம். வசதிகுறைந்தவர்களுக்காக ஆலயத்தின் மகளிர் பிரிவு இந்நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருவதற்கு நன்றியை பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்திற்கு இந்த ஆலயம் பிரசித்தி பெற்றிருந்தாலும் நாங்கள் மேற்கொண்டுவரும் சமூகநல நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் யாருக்கும் தெரிவதில்லை. எவ்வித விளம்பரங்களும் இல்லாமல் செய்கின்றோம். கடந்த ஆண்டு 50 பேருக்கு மட்டுமே உதவியை வழங்கிய நிலையில் இவ்வாண்டு 100 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என டத்தோ கிருபாகரன் கூறினார்.

இதனிடையே, இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட செணட்டர் டத்தோ சம்பந்தன் கூறுகையில், ஐ.பி.எப். எப்போதும் கல்வி, சமூகம், சமயம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் இந்த ஆலயம் சமூகநல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதால் அதற்கு ஆதரவளிக்க முன்வந்திருப்பதாக கூறினார். இந்நிகழ்ச்சிக்காக 1,500 வெள்ளியை பெற்று தந்திருப்பதாக கூறிய அவர், தாம் செணட்டராக உள்ள வரையில் ஆலயத்திற்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் வெள்ளியும் மகளிர் பிரிவிற்கு 2 ஆயிரம் வெள்ளியும் வழங்குவேன் டத்தோ சம்பந்தன் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் ஈ.டபுள்யூ.ஆர்.எப்.பின் காஜாங் தலைவர் வடிவேலு, உலுலங்காட் இந்து சங்க தலைவர் டாக்டர் முரளி, ஐ.பி.எப். மகளிர் பிரிவு தலைவி ராஜம்மா, ஐ.பி.எப். உலுலங்காட் தொகுதி பொருளாளர் கந்தசாமி, இளைஞர் பிரிவு துணைத்தலைவர் கணேஷ்குமார் முதலானோர் கலந்துக்கொண்டனர்.