பெங்களூரு சிறையில் நடக்கும் முறைகேடுகள் குறித்து உயர்மட்ட குழு விசாரணைக்கு கடந்த 13-ம் தேதி கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

அவர், கடந்த 17-ம் தேதி அம்மாநில தலைமைச் செயலாளர் சுபாஷ் சந்திரகுந்தியாவை சந்தித்துப் பேசினார். பெங்களூரு சிறைக்கு நேற்று மாலையில், விசாரணை அதிகாரி வினய்குமார் சென்றார். வரவேற்பு அறை முதல் அங்கு குறிப்பிட்ட சில இடங்களை அய்வு செய்தார். நகர குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி மற்றும் போலீஸ் அதிகாரி ஆனந்த்ரெட்டி ஆகியோர் உடன் சென்றனர்.

இந்நிலையில், போலீஸ் டி.ஐ.ஜி. ரூபா நேற்று அளித்த பேட்டியில், ”சிறைக்குச் சென்று சோதனை செய்யும்படி என்னை யாரும் நிர்பந்தம் செய்யவில்லை. அதெல்லாம் என்னிடம் முடியாது. சிறை மருத்துவமனையில் இருந்த மருத்துவர்களை போதையில் இருந்த சில கைதிகள் தாக்கினர் என்று தகவல் கிடைத்தது.

எனவே, சிறைக்குச் சென்று சோதனை நடத்தினேன். அந்த சோதனையின் போது பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. அதைத்தான் அறிக்கையாக சிறைத்துறை டி.ஜி.பி-க்கு அனுப்பி வைத்தேன். அந்த அறிக்கை ரகசியமான ஒன்று. அது பற்றி வெளிப்படையாக பேச முடியாது. சிறையில் சசிகலா கைப்பையுடன் இருப்பது போல வெளியாகி உள்ள வீடியோ உண்மையானதுதான்” என்றார்.