ரோம், அக்.31 –

இத்தாலி சிரி ஆ லீக் கால்பந்துப் போட்டியில் முதலிடத்தில் இருக்கும் நப்போலி அணிக்கு, இண்டர் மிலான் தொடர்ந்து நெருக்குதலை அளித்து வருகிறது. திங்கட்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இண்டர் மிலான் 2 – 1 என்ற கோல்களில் வெரோனாவை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் வழி 11 ஆட்டங்களில் 29 புள்ளிகளுடன் இண்டர் மிலான் பட்டியலில் இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. முதலிடத்தில் இருக்கும் நப்போலியைக் காட்டிலும் இரண்டு புள்ளிகளில் பின் தங்கியுள்ளது. இத்தாலி சிரி ஆ லீக் போட்டியின் நடப்பு வெற்றியாளரான யுவன்டஸ் 28 புள்ளிகளுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

முதல் பாதி ஆட்டத்தில் 36 ஆவது நிமிடத்தில் ஸ்பெயினின் மத்திய திடல் ஆட்டக்காரர் போர்ஜா வலேரோ, இண்டர் மிலான் அணியின் முதல் கோலைப் போட்டார். எனினும் 59 ஆவது நிமிடத்தில் கியாம்பாலோ பசினி போட்ட கோலின் வழி வெரோனா ஆட்டத்தை சமப்படுத்தியது.

ஈவான் பெரிசிச் அடித்த இரண்டாவது கோல் இண்டர் மிலானின் வெற்றியை உறுதிச் செய்தது. இந்த பருவத்தில் இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் இண்டர் மிலான் தோல்வியே காணவில்லை என்பது குறிப்பிடதக்கது.