புடாபெஸ்ட், ஜூலை 20-
தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங் புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியில் முக்குளிப்பு பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்றதோடு அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்றார். முக்குளிப்பு போட்டியில் 10 மீட்டர் பிரிவில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
உலக முக்குளிப்பு போட்டியில் மலேசியா பங்குபெற தொடங்கியதிலிருந்து தங்கப் பதக்கத்தை வென்றதில்லை. தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தற்போது சியோங் ஜூன் ஹூங் வாயிலாக நினைவாகியுள்ளது. இந்த வெற்றி குறி
த்து சியோங் ஜூன் ஹூங் கூறுகையில், நான் உலக வெற்றியாளர் ஆகியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. பதக்கத்தை வெல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், உலகின் முதல்நிலை வீராங்கனையும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான சீனாவைச் சேர்ந்த ரென் கியானை 397.50 புள்ளிகளில் வீழ்த்தி இப்பதக்கத்தை வெல்வேன் என நினைக்கவில்லை என அவர் கூறினார்.
இப்போட்டியில் ரென் கியான் 391.95 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சீ யாஜீ 396.00 புள்ளிகள் பெற்று மலேசியாவுக்கு அடுத்த நிலையில் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார்.
