அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > மறுதேர்தலை ஜ.செ.க. நடத்தாது! -லிம் குவான் எங்
முதன்மைச் செய்திகள்

மறுதேர்தலை ஜ.செ.க. நடத்தாது! -லிம் குவான் எங்

கோலாலம்பூர், ஜூலை 20-

தேசிய சங்க பதிவிலாகா (ஆர்.ஓ.எஸ்) உத்தரவை ஏற்று ஜ.செ.க. அதன் மறுத்தேர்தலை நடத்தாது. மாறாக, ஆர்.ஓ.எஸ். வழங்கியுள்ள குற்றச்சாட்டில் அடிப்படைத்தன்மை இல்லாததால் அது குறித்து விளக்கம் கோர அக்கட்சி முடிவெடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் லிம் குவான் எங் கூறுகையில், அடிப்படையற்ற குற்றச்சாட்டை முன்வைத்து 2013ஆம் ஆண்டில் தேர்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைக்கு மறுத்தேர்தலை நடத்த வேண்டுமென ஆர்.ஓ.எஸ். கூறியுள்ளது எங்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது என நேற்று அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற 3 மணி நேர மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.

மத்திய செயலவைக்கான மறுத்தேர்தலை நடத்த ஜ.செ.க. பயப்படவில்லை. காரணம் 2013ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட மத்திய செயலவைக்கான தவணைக்காலம் முடியவுள்ளது. அக்கட்சியின் புதிய மத்திய செயலவை உறுப்பினர்களை தேர்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. 2017ஆம் ஆண்டிற்கான பேராளர்கள் பட்டியலுக்கு பதில் 2012ஆம் ஆண்டின் பேராளர்கள் பட்டியல் அடிப்படையில் மறுத்தேர்தலை நடத்த வேண்டுமென ஆர்.ஓ.எஸ். கூறியிருப்பது அறிவுக்கு பொருந்தாதது.

2013ஆம் ஆண்டில் வாக்களிக்க தகுதியுடைய பேராளர்கள் வாக்களிக்க மறுக்கப்பட்டதாக ஆர்.ஓ.எஸ். குற்றம் சாட்டியுள்ளது. 2013ஆம் ஆண்டின் மறுத்தேர்தலில் வாக்களிக்க தகுதியுடைய பேராளர்கள் எண்ணிக்கையும் 2012ஆம் ஆண்டின் தேர்தலுக்கான பேராளர்களின் எண்ணிக்கையும் ஒன்றே ஆகும். இதனை 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற மறுத்தேர்தலை பார்வையிட்ட வெளித்தணிக்கையாளர்கள் உறுதி செய்துள்ளனர். 2012 மற்றும் 2013 ஆகிய தேர்தல்களில் தகுதியுடைய பேராளர்களின் எண்ணிக்கையில் முரண்பாடு உள்ளதாக ஆர்.ஓ.எஸ். கூறியுள்ளது. 2013ஆம் ஆண்டில் 985 கிளைகள் இருந்தாலும் அதில் 751 கிளைகளைச் சேர்ந்த 2,576 பேராளர்கள் மட்டுமே வாக்களிப்பதற்கான தகுதியைக் கொண்டிருந்தனர்.

 2012ஆம் ஆண்டின் மத்திய செயலவைக்கான தேர்தலில் 865 கிளைகள் தகுதி பெற்றிருப்பதாக அக்கட்சி கூறியதில்லை. மாறாக, உத்துசான் நாளிதழில் வெளியான போலி அறிக்கைக்கு பின்னரே இந்த எண்ணிக்கை பற்றி பேச்சு எழுந்தது. உத்துசான் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் தாம் வெற்றி பெற்றதையும் தமக்கு இழப்பீடாக அந்நாளிதழ் ரிம 250,000 வெள்ளியை வழங்க வேண்டுமென கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதையும் லிம் குறிப்பிட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன