அண்மையச் செய்திகள்
முகப்பு > முதன்மைச் செய்திகள் > சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர், துணைப்பிரதமர் வாழ்த்து
முதன்மைச் செய்திகள்விளையாட்டு

சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர், துணைப்பிரதமர் வாழ்த்து

புடாபெஸ்ட், ஜூலை 20-

புடாபெஸ்டில் நடைபெற்றுவரும் ஃபீனா உலக நீச்சல் போட்டியின் முக்குளிப்பு பிரிவில் மலேசியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்த தேசிய முக்குளிப்பு வீராங்கனையான சியோங் ஜூன் ஹூங்கிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி முதலானோர் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

அனைத்துலக வெற்றியாளர் எனும் அங்கீகாரத்தைப் பெற்ற 27 வயதுடைய பேராக் மாநிலத்தைச் சேர்ந்த சியோங் ஜூன் ஹூங் பெண்களுக்கான முக்குளிப்பு போட்டியில் மலேசியாவிற்கு பெருமையைத் தேடி தந்துள்ளதாக பிரதமர் நஜீப் தனது டுவீட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சியோங் ஜூன் ஹூங் தங்க பதக்கம் வென்று மலேசியாவிற்கு பெருமிதத்தை பெற்று தந்துள்ளதாகவும் அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்வதாகவும் துணைபிரதமர் டத்தோஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி தனது டுவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உலக முக்குளிப்பு போட்டியில் மலேசியா பங்குபெற தொடங்கியதிலிருந்து தங்கப் பதக்கத்தை வென்றதில்லை.  தங்கப் பதக்கத்தை வெல்லும் மலேசியாவின் கனவு தற்போது சியோங் ஜூன் ஹூங் வாயிலாக நினைவாகியுள்ளது. இந்த வெற்றி குறித்து சியோங் ஜூன் ஹூங் கூறுகையில், நான் உலக வெற்றியாளர் ஆகியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. பதக்கத்தை வெல்ல வேண்டும் என நினைத்தேன். ஆனால், உலகின் முதல்நிலை வீராங்கனையும் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவருமான சீனாவைச் சேர்ந்த ரென் கியானை 397.50 புள்ளிகளில் வீழ்த்தி இப்பதக்கத்தை வெல்வேன் என நினைக்கவில்லை என அவர் கூறினார்.

இப்போட்டியில் ரென் கியான் 391.95 புள்ளிகள் பெற்று வெண்கலப் பதக்கத்தை வென்றார். சீனாவைச் சேர்ந்த மற்றொரு வீராங்கனையான சீ யாஜீ 396.00 புள்ளிகள் பெற்று மலேசியாவுக்கு அடுத்த நிலையில் வெள்ளி பதக்கத்தைப் பெற்றார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன