இந்தியர்களுக்காக பெந்தோங்கில் வெ.20 லட்சம் வெள்ளியில் பொதுமண்டபம்!

0
5

பெந்தோங், நவ. 4-
இவ்வட்டாரத்தில் வாழும் இந்தியர்களின் தேவையை கருத்தில் கொண்டு செயல்பட்டுவரும் பெந்தோங் இந்து தேவாலய பரிபாலன சபாவின் அடுத்த முயற்சியாக இவ்வட்டாரத்தில் 20 லட்சம் வெள்ளியில் பொதுமண்டபம் கட்டப்படவுள்ளது.

இரண்டு மாடிகள் கொண்ட கட்டடமாக கட்டப்படவிருக்கும் இந்த மண்டபம் இங்குள்ள மகா மாரியம்மன் ஆலயத்திற்கு பின்னால் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் கட்ட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கடந்த 35 வருட காலமாக ஆலயத்திற்கு பின்னால் உள்ள நிலத்தில் மண்டபத்தை எழுப்பப் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமாக இருந்தது. எங்களின் போராட்டத்திற்கு கடந்த ஈராண்டுகளுக்கு முன்பு வெற்றி கிடைத்தது.

அதனை தொடர்ந்து மண்டபத்தை கட்டுவதற்கான வரைபடத்தை நாங்கள் தயார் செய்து வைத்திருந்தோம். அண்மையில் பெந்தோங் இந்து தேவாலய பரிபாலன சபாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் சிறப்பு பிரமுகராக கலந்துக்கொண்ட பெந்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் போக்குவரத்துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாயிடம் இத்திட்டத்தை தெரியப்படுத்தினோம் என பெந்தோங் இந்து தேவாலய பரிபாலன சபாவின் தலைவர் என்.சந்திரன் தெரிவித்தார்.

இந்த மண்டபத்தின் கட்டுமானத்திற்கு அரசாங்கத்தின் சார்பில் 10 லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்குவதாக டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் உறுதியளித்துள்ளார். ஆகையால், இவ்வட்டார மக்களுக்கு நன்மை அளிக்கும் இத்திட்டத்திற்கான அடுத்தக்கட்ட வேலைகள் கூடிய விரைவில் ஆரம்பிக்கப்பட்டுவிடும். இந்த மண்டபத்தை இவ்வருட இறுதிக்குள் கட்டி முடிக்க நாங்கள் எண்ணம் கொண்டுள்ளோம் என சந்திரன் கூறினார்.

அண்மையில் பெந்தோங்கில் நடைபெற்ற தீபாவளி விருந்து உபசரிப்பில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் எஸ்.பி.எம். தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இந்திய மாணவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டதுடன் அன்பளிப்பும் வழங்கப்பட்டது.